Newzeland bans social media for chuildrens who are below 16  Google
உலகம்

16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை? : நியூசிலாந்து அரசு புதிய சட்டம், நாடாளுமன்றத்தில் தாக்கல்...!

சிறார்களின் மனநலம் மற்றும் இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சியாக சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு வயது வரம்பு விதிக்கும் சட்டத்தை நியூசிலாந்து அரசு முன்வைத்துள்ளது...

NARENDRAN K

குழந்தைகளின் இணைய பாதுகாப்புக்கு முக்கிய நடவடிக்கை:

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் சமூக ஊடக தளங்களை பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டத்தை நியூசிலாந்து அரசு முன்மொழிந்துள்ளது.

இளம் தலைமுறையினரின் மனநலம், கல்வி மற்றும் இணைய பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் தெரிவித்துள்ளார்.

வயது சரிபார்ப்பு கட்டாயம் :

புதிய சட்டத்தின் கீழ் Facebook, Instagram, TikTok, Snapchat உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் பயனர்களின் வயதை சரிபார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் அடையாள அட்டைகள், ஏற்கனவே உள்ள கணக்கு தகவல்கள் மற்றும் முகஅடையாள தொழில்நுட்பம் போன்றவற்றின் மூலம் வயது உறுதிப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகளை பின்பற்றத் தவறும் நிறுவனங்களுக்கு உலகளாவிய வருவாயின் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஏன் இந்த முடிவு?

சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடுவதால் இளைஞர்களின் மனநலம் பாதிக்கப்படுவது, இணையதள தொல்லைகள், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் கல்வியில் கவனச்சிதறல் போன்ற பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக நியூசிலாந்து அரசு கவலை தெரிவித்துள்ளது.

குழந்தைகளை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் அவசியம் என அரசு வலியுறுத்துகிறது.

அரசியல் ஆதரவு கிடைக்குமா?

இந்த மசோதாவுக்கு நியூசிலாந்தின் முக்கிய எதிர்க்கட்சியான லேபர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளதால், சட்டமாக மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இருப்பினும் சில கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நாடாளுமன்றத்தில் இது குறித்த விவாதம் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக நாடுகளின் கவனம் :

ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இளம் வயதினரின் சமூக ஊடக பயன்பாட்டை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளன.

அதே பாதையில் நியூசிலாந்தும் நகர்வது உலகளவில் டிஜிட்டல் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.