4 ஆண்டுகள் கடந்தும் போர் தொடர்கிறது :
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் நிலையில், உலக நாடுகள் பல்வேறு சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழலில் அமெரிக்கா, துருக்கி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த திட்டங்களுடன் சேர்த்து இந்தியாவும் ஒரு விரிவான சமாதானத் திட்டத்தை முன்வைத்துள்ளது.
திட்டத்தை உக்ரைன் அரசு "மிகவும் விரிவான மற்றும் முழுமையான திட்டம்" என்று பாராட்டியிருப்பது உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
போர் தொடங்கிய நாள் முதல் இந்தியா எந்த ஒரு தரப்புக்கும் வெளிப்படையாக ஆதரவாக செயல்படாமல், பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இதன் காரணமாகவே ரஷ்யாவுடனும், உக்ரைனுடனும் இந்தியா நல்ல உறவை பேண முடிந்தது.
தற்போது சமாதான பேச்சுவார்த்தை முயற்சிகளில் இந்தியா நேரடியாக பங்கேற்க இரு நாடுகளும் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா, இந்தியா முன்வைத்துள்ள திட்டம் மற்ற நாடுகளின் திட்டங்களை விட மிகவும் விரிவானதாக இருப்பதாக கூறியுள்ளார்.
குறிப்பாக கருங்கடல் பகுதியில் எரிசக்தி மற்றும் விவசாயப் பொருட்கள் தொடர்பான பாதுகாப்பு, போர் நிறுத்தம் மற்றும் நம்பிக்கை உருவாக்கும் நடவடிக்கைகள் ஆகியவை இந்தியாவின் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியை வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், அவர் பல நல்ல யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் புதின் கூறியுள்ளார்.
மேலும், இந்தியா அமைதிக்காக தொடர்ந்து செயல்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்தார்.
ஒரு காலத்தில் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா அல்லது ஐரோப்பிய சக்திகளையே உலகம் எதிர்பார்த்தது.
ஆனால் தற்போது ரஷ்யாவும், உக்ரைனும் இந்தியாவின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருவது, சர்வதேச அரசியலில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்திருப்பதை காட்டுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இரு தரப்புடனும் நல்லுறவை பேணியுள்ள இந்தியா, அமைதி பேச்சுவார்த்தைக்கான நம்பகமான நடுவர் நாடாக உருவெடுத்து வருவதாகவும் மதிப்பிடப்படுகிறது.
இதுவரை "பேச்சுவார்த்தை மற்றும் தூதரக தீர்வே ஒரே வழி" என்ற நிலைப்பாட்டில் இருந்த இந்தியா, தற்போது அதைவிட ஒரு படி மேலே சென்று நடைமுறைத் தீர்வுகளை முன்வைத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உலகின் மிகப்பெரிய போர்களில் ஒன்றை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்காற்றுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் உருவாகியுள்ளது.
======================