இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று நவம்பர் 16 டெல்லியில் இருந்து பிலிப்பைன்ஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் விடுத்த அழைப்பை ஏற்று, நவம்பர் 16 முதல் 18-ம் தேதி வரை இந்த பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
இந்தப் பயணத்தின்போது பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறவுள்ள 23 வது இந்தியா ஆசியான் உச்சி மாநாடு மற்றும் 21 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
ஆசியான் (ASEAN) என்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பாகும் இதில் 11 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவுக்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது.
இந்த மாநாட்டில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ள மற்றொரு விவகாரம் தென் சீனக் கடல் பகுதியில் நிலவும் பதற்றமாகும்.
தென் சீன கடல் பகுதியில் சீனா தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுடன் பிராந்திய மோதல்கள் நீடித்து வருகின்றன.
இந்தச் சூழலில், இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாப்பது, கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, சர்வதேச விதிகளின் அடிப்படையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கிழக்கு ஆசிய மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே, குவாட் (QUAD) கூட்டமைப்பு தொடர்பான விவகாரங்களும் கவனம் பெற்றுள்ளன.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த கூட்டமைப்பு, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இந்தியாவின் 'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது.
இக்கொள்கையின் மூலம் ஆசியான் நாடுகளுடனான பொருளாதார, அரசியல் மற்றும் பாதுகாப்பு உறவுகளை இந்தியா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.