பரபரப்பை கிளப்பும் டிரம்ப்
US President Donald Trump Announcement as Acting President Venezuela : இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றதில் இருந்து உலகின் சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வருகிறார் டொனால்டு டிரம்ப். கூடுதல் வரி விதிப்பு, விசா கெடுபிடிகள், குடியேற்ற உரிமைகள் ரத்து என நாளும் அவரது செயல்பாடுகள் பதற்றத்தை அதிகரிக்க செய்கின்றன.
வெனிசுலா மீது தாக்குதல்
அமெரிக்காவில் போதைப்பொருள் விற்பனைக்கு வெனிசுலாவே காரணம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது கடந்த வாரம் அமெரிக்க போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தியது. தலைநகர் கராகஸ் குண்டு மழையில் அதிர்ந்தது.
அமெரிக்காவில் மதுரொ
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரொ, அவரது மனைவி சிலியா புளோரசை அமெரிக்க சிறப்பு படை கைது செய்து, நாடு கடத்தி விட்டதாக டிரம்ப் அறிவித்தார். அடுத்த திருப்பமாக, அமெரிக்கா அழைத்து வரப்பட்ட மதுரொ, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிபர் டிரம்ப் பதிவு
இந்த அதிர்ச்சியில் இருந்து உலக நாடுகள் மீள்வதற்குள், மீண்டும் ஷாக் கொடுத்து இருக்கிறார் டிரம்ப். தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். வெனிசுலாவின் தற்காலிக அதிபர் தான் என்று அவர் குறிப்பிட்டு இருப்பது, அந்நாட்டு அரசியல் எதிர்காலம் குறித்த புதிய விவாதங்களை உலக அரங்கில் கிளப்பியுள்ளது.
வெனிசுலா அதிபர் யார்?
வெனிசுலாவில் தற்காலிக அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்ற நிலையில், டிரம்ப் அதிர்ச்சி அறிவிப்பு, தென் அமெரிக்க நாடுகளில் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. வெனிசுலாவில் முறையான, பாதுகாப்பான ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்நாட்டின் நிர்வாகத்தை அமெரிக்கா மேற்பார்வையிடும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் வளம் - அமெரிக்கா வசம்
வெனிசுலாவிடம் இருந்து சுமார் 3 முதல் 5 கோடி பேரல்கள் உயர்தர கச்சா எண்ணெயை அமெரிக்கா பெற்றுக்கொள்ளும் என்றும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இரு நாடுகளின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்றும் டிரம்ப் கூறி வருகிறார். இதனால், வெனிசுலாவின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
==============