மொராக்கோவில் வறுமை, வேலையின்மை
முஸ்லிம் நாடான ஆப்பிரிக்காவின் மொராக்காவில் வறுமை, வேலையின்மை தலைவிரித்து ஆடுகிறது. பசி, பட்டினியால் அவதிப்படும் அந்நாட்டு மக்கள், புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.
ஸ்பெயினுக்குள் தஞ்சம்
மொராக்கோவின் அண்டை நாடுதான் ஸ்பெயின். எனவே, அங்கு அகதிகளாக தஞ்சம் புக மொராக்கோ மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மொராக்கோவின் ஃபனிடெக், பெலியூன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 70,000 பேர் தரை மற்றும் கடல் வழியாக ஸ்பெயின் எல்லையான சியூட்டாவை நோக்கி ஒரே நாளில் குவிந்தனர்.
ஐரோப்பாவின் நுழைவாயில் என்று அழைக்கப்படும் ஸ்பெயினின் சியூட்டாவின் மொத்த மக்கள் தொகையே 83 ஆயிரம்தான்.
தஞ்சம் புகும் மொராக்கோ மக்கள்
ஆனால் இங்கு கடந்த 24 மணி நேரத்தில் 49 ஆயிரம் பேர் மொராக்கோவிலிருந்து கடலில் நீந்தியபடியும், வேலிகளைத் தாண்டியபடியும் உள்ளே நுழைந்து இருக்கிறார்கள்.
கடலில் மூழ்கி 34 பேர் பலி
இதில் கடலில் அவர்கள் வந்த சிறிய கப்பல்களில் ஒன்று மூழ்கியதில் 34 பேர் பலியான சோகமும் அரங்கேறி இருக்கிறது. கடலில் இடைமறிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை, உடனே திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
ராணுவத்தை களமிறக்கிய ஸ்பெயின்
இதை தவறாக புரிந்து கொண்ட மொராக்கோ மக்கள், தங்களுக்கு தடை விதிக்கவில்லை எனக் கூறி, சாரிசாரியாக ஸ்பெயினுக்குள் நுழைகின்றனர்.
நிலைமை கைகமீறியதை அடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ராணுவத்தை களமிறக்கியுள்ளார். உள்ளூர் நிர்வாகம் இதனை 'மனிதப்பேரழிவு அவசர நிலை' என அறிவித்து இருக்கிறது.
தாராள குடியேற்ற கொள்கை
ஸ்பெயின் அரசின் தாராளமான குடியேற்றக் கொள்கைகள்தான் இந்த எல்லைப் பாதுகாப்புச் சீர்கேட்டிற்குக் காரணம் என பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் தலைவர்கள் கடுமையான கண்டனங்களைப்பதிவு செய்துள்ளனர்.
அரசுகள் தீவிரப் பேச்சுவார்த்தை
எல்லைகளை மீட்டெடுக்கவும், இயல்புநிலையைத் திருப்பிக் கொண்டு வரவும் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அரசுகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
நாட்டை விட்டு வெளியேறக் காரணம்?
மொராக்கோவில் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் வறுமை ஆகியவையே இதற்கான முதன்மை காரணங்களாக கருதப்படுகின்றன.
விரக்தியில் இளைஞர்கள்
இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. போதிய வேலைவாய்ப்புகள் கிடைக்காத சூழலில், பொருளாதார தேக்கநிலை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.
இதனால், விரக்தியடையும் இளைஞர்கள், சிறந்த வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தைத் தேடி ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கத் துணிகின்றனர்.
ஐரோப்பாவை நோக்கி படையெடுப்பு
மொரோக்கோவிற்கு அண்டை நாடாக ஸ்பெயின் இருப்பதால், முதலில் அங்கு தஞ்சம் புகும் இளைஞர்கள், பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்கின்றனர்.
அகதிகளாக இருந்து பின்னர் ஐரோப்பிய நாடுகளில் சட்டப்பூர்வ குடியுரிமை அல்லது வேலை வாய்ப்பைப் பெறுவதே மொராக்கோ இளைஞர்கள் குறிக்கோளாக இருக்கிறது.
====