வங்கதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு மாணவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டம் பெரும் மக்கள் எழுச்சியாக மாறியது.
இதையடுத்து அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்குத் தப்பி வந்தார். அன்றிலிருந்து அவர் இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து வங்கதேசம் திரும்புவது உறுதி என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு மின்னஞ்சல் மூலம் அவர் அளித்த பேட்டியில், தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசம் திரும்பினால் தாம் கைது செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகலாம் என்பது தனக்குத் தெரியும் என்றும் ஹசீனா கூறியுள்ளார்.
இருப்பினும், தனது மக்களின் நிலையை வெளிநாட்டில் இருந்து பார்த்துக்கொண்டே வாழ முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு போராட்டத்தின்போது நடைபெற்ற வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ஷேக் ஹசீனாவை இந்தியா தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேச அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவரை ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசத்தின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஹுமாயுன் கபீர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹசீனா இந்தியாவில் இருந்து வங்கதேசம் திரும்புவதற்கான வழிமுறை என்ன என்பது இன்னும் தெளிவாகவில்லை.
அவர் எந்தத் தேதியில், எப்படித் திரும்புவார் என்பது குறித்த விவரங்களையும் தனது பேட்டியில் தெரிவிக்கவில்லை.
அரசியல் சூழலும் ஹசீனாவின் கட்சியின் நிலையும் :
ஹசீனா ஆட்சியில் இருந்து வெளியேறிய பிறகு, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டது.
அதை தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது. அந்தத் தேர்தலில் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
தற்போது அக்கட்சி தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் முக்கிய தலைவர்கள் சிலர் கைது செய்யப்பட்டும், சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.
======================