வங்கதேச சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களில் இந்தியர்களே அதிக எண்ணிக்கையில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் பெற்றுள்ளது.
மொத்தம் 15 நாடுகளை சேர்ந்த 407 வெளிநாட்டவர்கள் வங்கதேச சிறைகளில் இருப்பதாகவும், அவர்களில் 238 பேர் இந்தியர்கள் என்றும் அந்நாட்டு ஊடகமான தி டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 168 இந்தியர்கள் தங்களது தண்டனைக் காலத்தை முடித்த பின்னரும், நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவடையாததால் சிறைகளில் தொடர்ந்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசச் சிறை அதிகாரிகள் அளித்த தகவலின்படி, அந்நாட்டின் சிறைகளில் இந்தியா, மியான்மர் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த 407 வெளிநாட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 44 பேர் குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட்டவர்கள். 191 பேர் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.
மேலும், 172 பேர் தண்டனைக் காலத்தை முடித்தவர்கள் அல்லது விடுதலைக்குத் தகுதியானவர்கள் என்றபோதிலும், சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முடிவடையாததால் தொடர்ந்து சிறையில் உள்ளனர்.
வங்கதேசச் சிறைகளில் உள்ள 238 இந்தியர்களில் 168 பேர் தங்களது தண்டனைக் காலத்தை நிறைவு செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறைகள் இன்னும் முடிவடையவில்லை.
வெளிநாட்டுக் கைதிகளைத் திருப்பி அனுப்புவதற்குத் தொடர்புடைய நாடுகளின் அனுமதியும் தேவையான ஆவணங்களும் கிடைக்காததால் தாமதம் ஏற்படுவதாக வங்கதேசச் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் முக்கியமான சிக்கலாக இருப்பது கைதிகளின் தேசியத்தை உறுதிப்படுத்துவதுதான்.
வங்கதேச வெளியுறவு அமைச்சகம், தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறப்படும் 121 கைதிகளின் பட்டியலை இந்தியாவிடம் பகிர்ந்துள்ளது.
ஆனால், அந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலானவர்களின் தனிப்பட்ட விவரங்கள், அவர்கள் இந்தியர்கள் என்பதை உறுதிப்படுத்தப் போதுமானதாக இல்லை என்று டாக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வங்கதேசச் சிறைகளில் உள்ள வெளிநாட்டவர்கள் போதைப்பொருள் கடத்தல், தங்கக் கடத்தல், மோசடி, போலி அமெரிக்க டாலர் புழக்கம், கடவுச்சீட்டு தொடர்பான குற்றங்கள் சட்டவிரோத இணையத் தொலைபேசி சேவைகள் மற்றும் மனிதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்டனைக் காலத்தை முடித்த வெளிநாட்டவர்களை நீண்ட காலம் சிறையில் வைத்திருப்பது சிறை நிர்வாகத்துக்குக் கூடுதல் செலவையும் நிர்வாகச் சிக்கல்களையும் ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசச் சிறைகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களின் தேசியத்தை உறுதிப்படுத்துவதும், தண்டனைக் காலத்தை முடித்தவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
இதற்காக வங்கதேச வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
===================