வங்கதேச பிரதமாராகும் தாரிக் ரஹ்மான்
PM Modi invite to attend Tarique Rahman’s swearing-in ceremony of Bangladesh PM : பிஎன்பி கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை (பிப்ரவரி 17-ம் தேதி) வங்கதேச பிரதமராக பதவியேற்கிறார். வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த வங்கதேச பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது.
300 இடங்களைக் கொண்ட வங்கதேச நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
பதவியேற்பு விழாவுக்கு பிரதமருக்கு அழைப்பு
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் வங்கதேசத்தில் பிஎன்பி ஆட்சி அமைய உள்ளது. வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை(பிப்ரவரி 17) பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு, வங்கதேசம் நேற்று அழைப்பு விடுத்துள்ளது. எனினும், வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி மும்பையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற உள்ள செயற்கை நுண்ணறிவு தொடர்பான உச்சி மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்க உள்ளார். இதனால், பிரதமருக்குப் பதிலாக பதவியேற்பு விழாவுக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் செல்லவுள்ளனர்.
முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் அழைப்பு
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பதவியிழப்புக்குப் பிறகு இந்தியா - வங்கதேசம் இடையேயான உறவில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த அழைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பாகிஸ்தான் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள், சீனா, மலேசியா போன்ற பிற நட்பு நாடுகளின் தலைவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்க வங்கதேசம் திட்டமிட்டுள்ளதாக தெரியும் நிலையில், வங்கதேச வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்த உடனே, பதவியேற்பு விழா வருகைக்கு அழைப்பு வந்துள்ளது,
இரு நாட்டின் வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.