தாய்லாந்து - கம்போடியா சண்டை
Thailand Cambodia War Update Ceasefire in Tamil : தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து கம்போடியா இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சினை சண்டைக்கு வழி வகுத்தது. போர் விமானங்கள், ராக்கெட்டுகள், பீரங்கிகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இரு நாடுகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டன.
100க்கும் அதிகமானோர் பலி
இந்த தாக்குதல் காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரு நாடுகளிலும் இடம் பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இந்தப் போர் இருநாட்டு பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
போரை நிறுத்த முடிவு
இதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக போர் நிறுத்தம் செய்ய தாய்லாந்தும், கம்போடியாவும் முன் வந்தன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர் நத்தபோன் நக்ரபனிட்டும், கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சகா டீ சாய்ஹாவும் கையெழுத்திட்டனர்.
போர் நிறுத்த உடன்படிக்கை
இந்த போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தை கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.
உடனடியாக தாக்குதல் நிறுத்தம்
அதில், ‘‘இரு நாடுகளும் தற்போது நிறுத்தியுள்ள படைகளை எந்த அசைவுகளும் இன்றி பராமரிக்க ஒப்புக் கொள்ளப்படுகிறது. போர் நிறுத்தம் நண்பகல் 12 மணிக்கு நடைமுறைக்கு வரும்.
படைகளை குவிக்க கூடாது
படைகளை வலுப்படுத்தும் எந்த ஒரு முயற்சியையும் யாரும் மேற்கொள்ளக்கூடாது. அவ்வாறு முயல்வது, இயல்பு நிலைக்கான நீண்ட கால முயற்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் 20 நாட்கள் நீடித்த சண்டை முடிவுக்கு
சண்டையின் பின்னணி - சிவன் கோவில்
கம்போடியா, தாய்லாந்து எல்லையில் டாங்கிரெக் மலையில் அமைந்துள்ள பிரியா விகார் என்ற சிவன் கோவிலை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதுதொடர்பாக 1959-ம் ஆண்டில் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்தை நாடின.
நீதிமன்றத்தில் கோவில் விவகாரம்
1962-ம் ஆண்டில், பிரியா விகார் கோயில் கம்போடியாவுக்கு சொந்தமானது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை ஏற்றுக்கொள்ளாத தாய்லாந்து, இந்த கோயில் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று இன்றுவரை கூறி வருகிறது.
கோவிலுக்கு உரிமைக்கோரி போர்
தாய்லாந்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தா முயென் தாம், தா முயென் டோட், தா குவாய் ஆகிய 3 இந்து கோயில்கள் உள்ளன. இவை 12-ம் நூற்றாண்டு கோயில்கள் ஆகும். எல்லைப் பகுதியில் உள்ள இந்த கோயில்களை கம்போடியா சொந்தம் கொண்டாடி வருகிறது.
பீரங்கி தாக்குதல் - மூண்ட சண்டை
இந்தச் சூழலில் கடந்த ஜூலை 24-ம் தேதி கோயில் வளாகத்தில் கம்போடிய ராணுவத்தின் ட்ரோன்கள் பறந்ததாகவும், கம்போடிய ராணுவ வீரர்கள் கோயிலை நோக்கி முன்னேறியதாகவும் குற்றம் சாட்டிய தாய்லாந்து, அந்நாட்டுக்கு எதிராக கடுமையான பீரங்கி தாக்குதலை நடத்தியது. இதையடுத்து, கம்போடியாவும் பதில் தாக்குதலை நடத்தியது.
டிரம்பின் முயற்சி தோல்வி
இந்நிலையில், கடந்த அக்டோபரில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை தான் ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறினார். எனினும், சிறிய கால இடைவெளிக்குள் மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே சண்டை மூண்டது குறிப்பிடத்தக்கது.
=====================