உலக அளவில் அமெரிக்க டாலரே பொதுவான பண பரிமாற்ற கரன்சியாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாடும் தனக்கென கரன்சிகளை கொண்டிருந்தாலும், அண்டை நாட்டுடன் வர்த்தகம், தங்கம் விலை, கச்சா எண்ணெய் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு டாலரே பிரதானமாக இருக்கிறது.
உலகின் வேகமாக வளர்ந்து வரும் 10 பொருளாதார சக்திகளின் அமைப்பான பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் கூட்டம் பிரேசிலில் நடந்து முடிந்தது. டாலரை நம்பி இருக்காமல், பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு என பொதுவான கரன்சியை உருவாக்க விரும்புகின்றன.
உலகின் ராஜா டாலர் - டொனால்டு ட்ரம்ப் :
இது அமெரிக்க டாலரின் மதிப்பை சரித்து விடும் என்று அதிபர் ட்ரம்ப் அஞ்சுகிறார். எனவே, பிரிக்ஸ் கூட்டமைப்பு கூட்டம் முடிந்த நிலையில், உலகின் ராஜா டாலர்தான் என்று அவர் தெரிவித்து இருக்கிறார்.
இதை கருத்தில் கொண்டே பிரிக்ஸ் நாடுகளுக்கு 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று அவர் மிரட்டல் விடுத்துள்ளார் அமெரிக்காவை காயப்படுத்தவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது என்பதும் அவரின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
பிரிக்ஸ்-ஐ மிரட்டும் அதிபர் ட்ரம்ப் :
டாலருக்கு எதிரான கரன்சி கொண்டு வர முயன்றால், பிரிக்ஸ் நாடுகள் பெரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். டாலருக்கு சவால் விட்டால், விளைவு மோசமாக இருக்கும். பிரிக்ஸ் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் கிடையாது. இருந்தாலும், மோதினால் பாதிப்பு அவர்களுக்குத்தான் என்று ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
===