Ukraine's Major Strike on Crimea Bridge Disrupts Russia's Military Supply Route Ai Generated
உலகம்

புடினுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன்! : ரஷ்யாவின் முக்கிய பாலத்தை தகர்த்த தாக்குதல்... என்ன நடந்தது?

ட்ரோன்கள், ஏவுகணைகள் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய உக்ரைன் ராணுவம்... ரஷ்யாவின் ராணுவ விநியோகப் பாதையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ...

NARENDRAN K

ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த உக்ரைன் :

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் முக்கிய போக்குவரத்து கட்டமைப்புகளில் ஒன்றான கிரிமியா பாலத்தை உக்ரைன் ராணுவம் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவம்பர் 16 முதல் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில், பாலத்தின் சாலைப் பகுதி முற்றிலும் சேதமடைந்து, அதன் ஒரு பகுதி கடலில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

19 கி.மீ நீளமுள்ள முக்கிய பாலம் :

ரஷ்யாவின் நிலப்பரப்பையும், கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் இந்த கெர்ச் பாலம் சுமார் 19 கிலோமீட்டர் நீளம் கொண்டது.

சாலை மற்றும் ரயில் போக்குவரத்து என இரண்டு வசதிகளைக் கொண்ட இந்தப் பாலம், ரஷ்யாவுக்கு மிகவும் முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக இருந்து வருகிறது.

குறிப்பாக, கிரிமியா பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் படைகளுக்கு எரிபொருள், ஆயுதங்கள் மற்றும் ராணுவதளவாடங்களைக் கொண்டு செல்வதற்கு இந்தப் பாலம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு இந்தப் பாலம் கட்டப்பட்டது.

அடுத்தடுத்து தாக்குதல் நடத்திய உக்ரைன் :

நவம்பர் 16ஆம் தேதி இந்த பாலத்தின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது.

தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் பாலத்தின் முக்கிய சாலைப் பகுதி இடிந்து கடலில் விழுந்ததாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்தது.

இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதியும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த முறை பாலத்தின் ரயில் பாதையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் ரயில் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எந்த ஆயுதங்களை பயன்படுத்தியது உக்ரைன்?

இந்தத் தாக்குதல்களில் உக்ரைன் தனது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பலியானியா (Palianytsia) ட்ரோன் ஏவுகணைகள், நெப்டியூன் (Neptune) ஏவுகணைகள், ஃபிளமிங்கோ (Flamingo) ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலுக்கு முன்பாக ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளைக் குறிவைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் ராணுவ விநியோகத்தில் பாதிப்பு:

இந்தப் பாலத்தின் சேதம் ரஷ்யாவின் ராணுவத் தளவாடப் போக்குவரத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷ்யா மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

குறிப்பாக, உக்ரைன் ஆக்கிரமிப்புப் பகுதிகள் வழியாகச் செல்லும் M-14 நெடுஞ்சாலை உள்ளிட்ட மாற்றுப் பாதைகள் வழியாக ரஷ்யா தனது விநியோகத்தைத் தொடர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் தாக்குதல்களால் ரஷ்யாவின் போர்முனை நடவடிக்கைகள் உடனடியாக முடங்கிவிடும் என்று கூற முடியாது என ராணுவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

=====================