ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போா்
USA offers, Indian refiners buying prompt Russian oil as Iran war hits supplies, for 30 days : ஈரான், அமெரிக்கா - இஸ்ரேல் போா் 7வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலடி கொடுத்து வருவதால், போர் எல்லைகள் விரிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. அதிபர் டிரம்ப் கூறியபடி, நான்கு வாரங்கள் வரை போர் நீடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்
போர் உக்கிரமடைந்து வருவதால், கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய வழியான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அந்த வழியாக கப்பல்கள் சென்றால், தாக்குதல் நடத்துவோம் என்றும் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
700 கப்பல்கள் நிறுத்தம்
இதன் காரணமாக 700க்கும் அதிகமான எண்ணெய் கப்பல்கள், வளைகுடா கடல் பகுதியில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக் கணக்கான மாலுமிகள் மற்றும் சிப்பந்திகளில் இந்தக் கப்பல்களில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்தியாவுக்கு 40% கச்சா எண்ணெய்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யில் 40 சதவீதம் ஹோர்முஸ் நீரிணை வழியாகவே கொண்டு வரப்படுகிறது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடா?
அடுத்த 25 நாள்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் இருப்பு இருந்தாலும், நிலைமை தொடர்ந்தால் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவும்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கொள்முதல்
இந்த நெருக்கடியில் இருந்து இந்தியா மீளும் வகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள, அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்கா தற்காலிக விலக்கு
இது தொடர்பாக அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ஏதுவாக, அமெரிக்க நிதித்துறை 30 நாட்களுக்கு தற்காலிக விலக்கு அளித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போரினால் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய சந்தையில் எண்ணெய் வரத்து தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.
இந்தத் தற்காலிக நடவடிக்கை ரஷ்ய அரசாங்கத்திற்குப் பெரிய அளவில் நிதி ஆதாயத்தை வழங்காது. ஏனெனில் இது ஏற்கனவே கடலில் தேங்கியுள்ள எண்ணெயைக் கையாளுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகப்படுத்தும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா-ரஷ்யா கச்சா எண்ணெய் விற்பனை
ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கான எண்ணெய் இறக்குமதி 44 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஜனவரி மாதம் வெகுவாக குறைந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு மே 2022க்கு பிறகு முதல் முறையாக 20%-க்கும் கீழே குறைந்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் காரணமாக இந்தியா, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்து இருக்கிறது.
இந்தியாவில் தட்டுப்பாடு வராது
இந்தியாவுக்கு 95 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய ரஷ்யா தயாராக இருப்பதால், போர் காரணமாக இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று தெரிகிறது.
====================