20வது நாளாக நீடிக்கும் போர்
Iran's attack on a gas plant in Qatar : ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்தி வரும் தாக்குதல் 20வது நாளாக நீடிக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டு இருப்பதால், ஒரு சில நாடுகள் தவிர பெரும்பாலான நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுந
எரிவாயு ஆலை மீது தாக்குதல்
ஈரானின் சவுத் பார்ஸ் எண்ணெய் வயல் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள திரவ இயற்கை எரிவாயு ஆலையின் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்.
இதன் காரணமாக எண்ணெய் வயல்கள் பற்றி எரிகின்றன. இதனால், கத்தாரில் இருந்து எரிவாயு சப்ளை செய்வது பெரிய அளவில் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
டிரம்ப் கடும் ஆத்திரம்
இந்த நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு உச்ச கட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் போட்டுள்ள பதிவில், “மத்திய கிழக்கில் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட கோபத்தில், இஸ்ரேல் ஈரானில் உள்ள சவுத் பார்ஸ் எரிவாயு வயல் எனப்படும் ஒரு முக்கிய ஆலையை வன்முறையாகத் தாக்கியுள்ளது.
இஸ்ரேல் தாக்கியது தெரியாது
அந்த ஆலையின் ஒரு சிறிய பகுதி மட்டுமே தாக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் பற்றி அமெரிக்காவிற்கு எதுவும் தெரியாது. மேலும், கத்தார் நாடு இதில் எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை. இது நடக்கப்போகிறது என்பது பற்றியும் அதற்கு எந்த தகவலும் தெரியாது. துரதிர்ஷ்டவசமாக, ஈரானுக்கு இதைப் பற்றியோ அல்லது சவுத் பார்ஸ் தாக்குதல் தொடர்பான வேறு எந்த முக்கிய உண்மைகளோ தெரியாது.
ஈரான் தாக்குதலை ஏற்க முடியாது
ஆனால் ஈரான் கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஆலையின் ஒரு பகுதியை நியாயமற்ற முறையிலும், நேர்மையற்ற விதத்திலும் தாக்கியுள்ளது.
ஈரான் அறிவீனமாக ஒரு அப்பாவி நாட்டை, இந்த விஷயத்தில் கத்தாரை தாக்க முடிவு செய்தால் தவிர, இந்த மிகவும் முக்கியமான மற்றும் மதிப்புமிக்க சவுத் பார்ஸ் வயல் தொடர்பாக இஸ்ரேல் இனி எந்த தாக்குதலையும் நடத்தாது.
பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும்
அப்படி நடந்தால், அமெரிக்கா, இஸ்ரேலின் உதவியுடனோ அல்லது சம்மதத்துடனோ அல்லது அது இல்லாமலோ, ஈரான் இதுவரை கண்டிராத அல்லது பார்த்திராத ஒரு பெரும் சக்தியுடனும் ஆற்றலுடனும் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் தகர்த்துவிடும்.“ என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஈரானின் எதிர்காலத்தில் அது ஏற்படுத்தக்கூடிய நீண்டகால பாதிப்புகள் காரணமாக, இந்த அளவிலான வன்முறைக்கும் அழிவுக்கும் நான் அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை. ஆனால், கத்தாரின் LNG மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்க மாட்டேன்.“ என்றும் கடுமையான எச்சரிக்கையை டிரம்ப் விடுத்துள்ளார்.
ஈரான் அதிபர் எச்சரிக்கை
தங்களின் பிரம்மாண்டமான சவுத் பார்ஸ் இயற்கை எரிவாயு வயல் மீதான தாக்குதலை கண்டித்துள்ள ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், இதற்காக சம்பந்தப்பட்டவர்கள் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தார்.
உலகிற்கே பெரும் இழப்பு
எண்ணெய் வயல்கள் மீது பரஸ்பரம் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களால், மத்திய கிழக்கு போர் மிகவும் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரான் உட்பட, வளைகுடா மொத்தத்திலும் உள்ள எண்ணெய் வளம் அழிக்கப்பட்டால், அது உலகிற்கே ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பாக மாறிவிடும்.
=====