நிதிசார் தொழில்நுட்ப உச்சிமாநாடு
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற உலகளாவிய நிதிசார் தொழில்நுட்ப மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
வரலாற்று மைல்கல்லை எட்டிய இந்தியா பிரதமர் பெருமிதம்
அப்போது, இந்திய பொருளாதாரம் மேற்கொண்டு வரும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை காரணமாக தற்போது வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் சீர்திருத்தப் பயணம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிக வேகமாக முன்னோக்கி நகர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
UPI அமைப்பின் அசுர வளர்ச்சி
நாட்டின் தொழில்நுட்பப் புரட்சியில் UPI பணப் பரிவர்த்தனை சேவை மறுக்க முடியாத பெரும் வெற்றியாளராகத் திகழ்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
மேலும் வங்கி சேவைகளை சாமானிய மக்களின் விரல் நுனிக்கு கொண்டு வர முடியும் என்ற தொடக்கக்கால கனவு சாத்தியமற்றது என பலர் கருதிய நிலையில், பல தலைமுறைகளாக வங்கி சேவை பெற முடியாத கோடிக்கணக்கான மக்கள் தற்போது இந்திய நிதிசார் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகத் தெரிவித்தார்.
சர்வதேச அளவில் UPI தடம்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 2,400 கோடிக்கும் அதிகமான UPI பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட இந்தச் சேவை, தற்போது உலகின் 11 நாடுகளில் வெற்றிகரமாக பயன்பாட்டில் உள்ளது. இதன் மூலம் ஒரு காலத்தில் கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக இருந்த சர்வதேச பணப் பரிவர்த்தனைகள், தற்போது அன்றாட நடைமுறையாக மாறியுள்ளன.
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பலன்கள்
உலக அளவில் வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு அதிக அளவில் பணம் அனுப்பும் மக்கள் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புவதற்கான செலவுகளைக் குறைப்பதற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், UPI சேவை அதற்குப் பெரிதும் உதவும் என்றும் தெரிவித்தார்.
இதனால் பணத்தை விரைவாகவும் சேமிப்புடனும் குடும்பங்களுக்கு அனுப்ப முடியும் எனக் கூறிய பிரதமர் மோடி, உலக அளவில் UPI வசதியை மேலும் விரிவுபடுத்த நிதிசார் தொழில்நுட்ப நிறுவனங்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
=====