உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்கா வாங்க வேண்டும் என்ற கருத்தை பல ஆண்டுகளாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்வைத்து வந்தார்.
ஆனால் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நிர்வாகம் தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில், கிரீன்லாந்தின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து இடையே புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தத்தின் கீழ் கிரீன்லாந்தில் அமெரிக்காவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு பங்கு மேலும் வலுப்படுத்தப்பட உள்ளது.
கிரீன்லாந்தின் பாதுகாப்பு தேவைகளில் அமெரிக்கா நிரந்தர பங்கு வகிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நேட்டோ அல்லாத நாடுகள் அங்கு ராணுவ தளம் அமைப்பதற்கும், முக்கிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இல்லை. இதுவே இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் அமெரிக்காவின் பாதுகாப்பு பங்கை அதிகரித்தாலும், கிரீன்லாந்தின் இறையாண்மை டென்மார்க்கிடமே தொடரும் என்று டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனவே, "கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்துவிட்டார்கள்" என்ற தகவல் துல்லியமானது அல்ல.
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வட துருவப் பகுதிகளுக்கிடையே மிக முக்கியமான இடமாக கருதப்படுகிறது.
ஏற்கனவே அங்கு அமெரிக்காவின் பிடூபிக் (Pituffik) விண்வெளி மற்றும் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.
மேலும், அரிய கனிம வளங்கள் மற்றும் ஆர்க்டிக் கடல் வழித்தடங்களின் முக்கியத்துவமும் கிரீன்லாந்தின் மீதான உலக நாடுகளின் கவனத்தை அதிகரித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இன்னும் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து நாடாளுமன்றங்களின் ஒப்புதலை பெற வேண்டும். அதன்பிறகே இது முழுமையாக அமலுக்கு வரும்.
இருப்பினும், இந்த ஒப்பந்தம் ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
கிரீன்லாந்தை வாங்க வேண்டும் என்ற டிரம்பின் பழைய கோரிக்கைக்கு மத்தியில் இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் உருவாகியிருப்பது உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு நோக்கங்கள் பூர்த்தி செய்யப்படுவதோடு, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்தின் இறையாண்மையும் அப்படியே தொடரும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
======================