US, Israel's sudden attack on Iran: World nations shocked! What is Khamenei's status? source
உலகம்

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்: கமேனி நிலை?, பதிலடி கொடுக்கும் ஈரான்! உலக நாடுகள் அதிர்ச்சி

US, Israel Attack on Iran News in Tamil : ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி இருக்கும் நிலையில், ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது.

S Kavitha

ரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்

US, Israel Attack on Iran News in Tamil : ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதல்

ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மீது இஸ்ரேல் திடீர் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. தெஹ்ரானின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் மூன்று இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து ஈரான், பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியுள்ளது.

கமேனியின் அலுவலகம் தான் இலக்கு

மேலும் இந்த தாக்குதல்கள் ஈரான் தலைமை மதகுரு கமேனியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு மிக அருகில் நடைபெற்று உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கமேனியின் நிலை என்ன?

இந்த தாக்குதலின் போது 86 வயதான கமேனி அலுவலகத்தில் இருந்தாரா? இல்லையா? அவருடைய நிலை என்ன என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

அவர் பாதுகாப்பான நிலவறைக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இஸ்ரேல் வீசி வரும் ஏவுகணைகளை இடைமறித்து அழித்து வருகிறது ஈரான். தலைநகர் டெஹ்ரான், அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளால் அதிர்ந்து வருகிறது.

இஸ்ரேல் ராணுவ அமைச்சர்

இந்த நிலையில் ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து, இஸ்ரேல் ராணுவ அமைச்சர், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி விட்டது என்று கூறியுள்ளார்.

இஸ்ரேல் முழுவதும் நிரந்தர எமெர்ஜென்சி

இந்த தாக்குதலானது இஸ்ரேலின் முன்கூட்டிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இஸ்ரேல் முழுவதும் நிரந்திர எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

2025-ல் இஸ்ரேல்-ஈரான் போர்

முன்னதாக, 2025 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் 12 நாட்கள் போர் நடைபெற்றது. அந்த போரில் ஆயிரக்கணக்கான மக்களும், ஈரானின் முக்கிய ராணுவத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, இஸ்ரேல் குற்றச்சாட்டு

அணுஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வந்ததாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து குற்றச்சாட்டை முன்வைத்தன.

ஒரு வேளை ஈரான் யுரேனியத்தை பயன்படுத்தினால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஈரானால் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து தான் இஸ்ரேலும், அமெரிக்காவும் சேர்ந்து 2025 ஆம் ஆண்டு ஈரானை தாக்கியது. அதன்பிறகும் தற்போது திடீர் தாக்குதலையும் நிகழ்த்தியுள்ளது.

3 கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

இதற்கு முன்பு அமெரிக்கா - ஈரான் இடையே 3 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூட சுமூக உடன்பாடு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரிய போர் மூளும் அபாயம்

இதனால் இந்த தாக்குதலில் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களமிறங்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மிகப்பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பெரிய பேரழிவு காத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

ஹார்மோஸ் நீரிணை பகுதி வழியாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வருவது முற்றிலுமாக நிறுத்தப்பட்டால், உலக அளவில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.

=================