அதிரடி காட்டும் டிரம்ப் :
Donald Trump Announces Tariff Dividend Dollar 2000 To Americans : அமெரிக்க அதிபராக இரண்டாம் முறை பதவியேற்றதில் இருந்தே டொனால்டு ட்ரம்ப் அதிரடி காட்டி வருகிறார். இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் மீது உச்சபட்ச அளவிலான வரி விகிதத்தை அவர் அமல்படுத்தினார். விமர்சனங்கள், எதிர்ப்புகள் என எதையுமே அவர் கண்டு கொள்ளவில்லை.
தாராளம் காட்டும் டிரம்ப்
டிரம்பின் கெடுபிடிகள் காரணமாக அமெரிக்காவில் வரி வருமானம் அதிகரித்து இருக்கிறது என்பது உண்மை தான். இதை மக்களுக்கு அளித்து, அவர்களின் கோபத்தை குறைக்கும் திட்டத்தை அவர் அறிவித்து இருக்கிறார். அதன்படி, வரி வருமானத்தில் இருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் குறைந்தபட்சமாக 2 ஆயிரம் டாலர்கள் பகிர்ந்து அளிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்கர்களுக்கு தலா 2,000 டாலர்கள்
இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.77 லட்சம் அவர்களுக்கு கிடைக்கும். என்றாலும் உயர் வருமானம் கொண்டவர்களுக்கு இந்தத் தொகை அளிக்கப்படாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார். இதுபற்றி, தனது "ட்ரூத் சோஷியல்" தளத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ‘’வரி விகிதங்கள் அமெரிக்காவை உலகின் பணக்கார மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாற்றி உள்ளன.
கெடுபிடிகளால் வரி வருவாய் உயர்வு
இதனால் வரி வருவாயில் இருந்து ஒவ்வொரு அமெரிக்கருக்கும் குறைந்தது 2,000 டாலர்கள் செலுத்தப்படும். ஆனால்அதிக வருமானம் ஈட்டுபவர்களை இந்தத் திட்டத்தில் இருந்து விலக்குகிறோம். வரி விகிதங்களை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள்" என்றும் விமர்சித்தார்.
மக்களுக்கு 2,000 டாலர்கள் - சாத்தியமா?
வரி வருவாயை நேரடியாக குடிமக்களுக்கு விநியோகிக்கும் இந்த முயற்சிக்கு அமெரிக்க காங்கிரஸின் ஒப்புதல் அவசியம். இந்த ஆண்டு தொடக்கத்தில், மிசௌரி குடியரசுக் கட்சி செனட்டர் ஜோஷ் ஹாவ்லி இதேபோன்ற ஒரு திட்டத்தை முன்மொழிந்து இருந்தார்.
இந்தத் தொகை எப்படி விநியோகிக்கப்படும். அதற்கான விவரங்கள், வருமான உச்சவரம்பு விதிமுறை எதுவும் இதுவரை தெளிவுப்படுத்தப்படவில்லை. எனவே, இது நடைமுறைக்கு சாத்தியமாக என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
கருவூலச் செயலாளர் எதிர்ப்பு
ஆனால், அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் அளித்த பேட்டியில், நிர்வாகத்தின் முக்கிய முன்னுரிமை, வரி வருவாயை வைத்து 38.12 டிரில்லியன் டாலர் தேசிய கடனை அடைப்பதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
===