2 ஆண்டுகளாக இடைவிடாத போர்
Israel Hamas War Ceasefire Update in Tamil : இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சண்டையால், காசா பகுதியில் மட்டும் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போர் என்ற பெயரில் இந்த அநீதி அரங்கேறியது. கிட்டத்தட்ட காசா பகுதி முழுவதுமே தரை மட்டமாகி விட்டது எனலாம். ஐநாவின் கணிப்பு படி, காசா பகுதியை கட்டமைக்க கால் நூற்றாண்டு அதாவது 25 ஆண்டுகள் ஆகும். அதற்கான நிதி? இந்த கேள்விக்கு பதிலே கிடையாது.
காசாவில் போர் நிறுத்தம்
பாலஸ்தீனத்தின் பெரும் சீரழிவுக்கு வழி வகுத்த காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும் முயற்சி மேற்கொண்டார். இதற்காக அவர் முன்வைத்த 20 அம்ச திட்டத்தை இஸ்ரேல் முதலில் ஏற்றது. ஹமாஸ் அமைப்பும் அதை ஏற்க முன்வந்த நிலையில், குண்டு சத்தம் ஓய்ந்து காசாவில் அமைதி திரும்பி இருக்கிறது. இஸ்ரேல் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டு, காசா பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கி இருக்கிறார்கள். ஹமாஸ் வசம் இருந்த இஸ்ரேல் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டு, நாடு திரும்பி இருக்கிறார்கள்.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
காசா அமைதி ஒப்பந்தத்தை நிரந்தரமாக செயல்படுத்தும் வகையில், எகிப்தில் அதிகாரப் பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தானது. ஷர்ம் எல் ஷேக் நகரில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் இந்த மாநாடு நடைபெற்றது. ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப் முன்னிலையில் அனைவரும் கையெழுத்திட்டனர்.
முதல் நபராக டொனால்டு டிரம்ப்
முதல் நபராக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் டொனால்டு டிரம்ப். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலாக வெளியுறவுத்துறை இணையமைச்சர் கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டார்.
காசாவில் அமைதி - டிரம்ப் பெருமிதம்
ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு உரையாற்றிய அதிபர் டொனால்டு டிரம்ப், ”பல வருட வலிகளுக்கு பிறகு, காசாவில் அமைதி திரும்பி இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் தாராளமாக கிடைத்து வருகின்றன. ஒரு புதிய, நம்பிக்கையான நாள் தொடங்கி இருக்கிறது.
மேலும் படிக்க : இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிப்பு : போர் நிறுத்தம், மக்கள் நிம்மதி
நன்றி தெரிவித்த டொனால்டு டிரம்ப்
மறுநிர்மாண பணிகள் விரைவில் தொடங்கும். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளை எடுத்துக் கொண்டது, இதை நம்ப முடிகிறதா? இது நிச்சயமாக நிலைத்து இருக்கும்” என டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கையுடன் பேசினார்.
============