Iran-US Conflict: Donald Trump Signals Winding Down of Military Operations but Rules Out Ceasefire:
ஈரான், இஸ்ரேல் - அமெரிக்க போர்
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளைக் குறைப்பது குறித்து அமெரிக்கா தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக, மத்திய கிழக்கில் நாம் மேற்கொண்டுள்ள மகத்தான இராணுவ நடவடிக்கைகளை முடித்துக்கொள்வது குறித்து நாம் பரிசீலித்து வரும் வேளையில், நமது இலக்குகளை அடைவதற்கு நாம் மிக நெருக்கமாக வந்துவிட்டோம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ராணுவக் குறைப்பு, போர் நிறுத்தம் அல்ல
தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ்டிரம்ப், "அமெரிக்கா தனது இலக்கை எட்டிவிட்டது, எனவே ராணுவ நடவடிக்கைகளைக் குறைக்கலாம்.
ஆனால் இது போர் நிறுத்தம் கிடையாது. எதிரியை முழுமையாக அழிக்கும்போது போர் நிறுத்தத்திற்கு அவசியமே இல்லை" என்று அதிரடியாகக் கூறியுள்ளார்.
மேலும் அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு அவர்களுக்கு எளிதான இராணுவ நடவடிக்கையாகவே அமையும். இவ்விஷயத்தில் நீங்கள் செலுத்திய கவனத்திற்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம்
ஹார்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் பிற நாடுகளே, தேவைக்கேற்ப அதனைப் பாதுகாத்து, கண்காணித்து ஒழுங்குபடுத்த வேண்டும் - அமெரிக்கா அதனைச் செய்யாது.
அவர்கள் கேட்டுக்கொண்டால், ஹார்முஸ் தொடர்பான அவர்களின் முயற்சிகளுக்கு நாம் உதவுவோம்.
ஆனால் ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக ஒழிக்கப்பட்ட பிறகு, அத்தகைய உதவி தேவைப்படாது என்றும் ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உதவி தேவைப்பட்டால் மட்டுமே அமெரிக்கா தலையிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் தலைமை எங்கே?:
"ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயார். ஆனால் அங்கே பேசுவதற்கு ஆளே இல்லை" என ட்ரம்ப் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுவெளியில் தோன்றாத மொஜ்தபா கமேனி
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட பிறகு, பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றாததை அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
கார்க் தீவு மற்றும் எரிவாயு வயல்கள்:
ஈரானின் 'கார்க்' தீவைக் கைப்பற்றும் திட்டம் உள்ளதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம்" எனப் பதிலளித்த ட்ரம்ப், பின்னர் அங்குள்ள ராணுவ நிலைகள் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டதை உறுதிப்படுத்தினார்.
ட்ரம்பின் திடீர் முடிவு?
இந்நிலையில் அமெரிக்க அதிபரின் ஈரான் போர் குறித்த இந்த திடீர் நிலைப்பாடு, நீண்ட நாட்களாக நீடித்து வரும் ஈரான்-அமெரிக்கப் போர் ஒரு முடிவுக்கு வருகிறதா? என்ற விவாதத்தை தற்போது எழுப்பியுள்ளது.