US Suffers ₹3.65 Lakh Crore Loss Due to Iran War, Report Reveals Ai Generated
உலகம்

ஈரான் போரால் அமெரிக்காவுக்கு ரூ.3.65 லட்சம் கோடி இழப்பு: அதிர்ச்சி அறிக்கை வெளியீடு ...

ஈரான் மோதலின் தாக்கமாக அமெரிக்காவின் ஏவுகணை கையிருப்புகள் குறைந்துள்ளதுடன், அவற்றை மீண்டும் நிரப்ப கூடுதல் நிதி தேவைப்படும் என கூறப்படுகிறது...

NARENDRAN K

காங்கிரஷனல் பட்ஜெட் அலுவலகம் என்ன சொல்கிறது?

அமெரிக்காவின் சுயாதீன Congressional Budget Office (CBO) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 பிப்ரவரி மாதம் தொடங்கிய ஈரான் தொடர்பான ராணுவ நடவடிக்கைகளால், ஆகஸ்ட் 1-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு சுமார் 38 பில்லியன் டாலர் செலவாகியுள்ளது.

இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.3.65 லட்சம் கோடி ஆகும்.

மாதந்தோறும் கூடும் போர் செலவு :

ஈரான் மோதல் தொடர்ந்தால், அமெரிக்காவுக்கு கூடுதலாக மாதந்தோறும் 2 முதல் 3 பில்லியன் டாலர் வரை செலவாகலாம் என்று CBO எச்சரித்துள்ளது.

மோதலின் தீவிரத்தைப் பொறுத்து இந்த செலவு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரூ.3.65 லட்சம் கோடி எதற்காக செலவானது?

இந்த செலவில் பெரும்பகுதி ஏவுகணைகள் மற்றும் போரில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீண்டும் வாங்குவது, சேதமடைந்த ராணுவ உபகரணங்களை மாற்றுவது, விமானப்படை பறப்புகள், எரிபொருள் செலவுகள் மற்றும் பிற ராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஏவுகணை கையிருப்புக்கு ஏற்பட்ட பாதிப்பு :

போரின் காரணமாக அமெரிக்காவின் ஏவுகணை மற்றும் ஏவுகணைத் தடுப்பு ஆயுத கையிருப்புகள் கணிசமாக குறைந்துள்ளதாக CBO குறிப்பிட்டுள்ளது.

இந்த கையிருப்புகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணவீக்கத்தையும் பாதித்த ஈரான் போர் :

ஈரான் மோதலால் ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக நடைபெறும் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதுடன், 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க பணவீக்கம் 0.5 சதவீத புள்ளிகள் வரை அதிகரிக்கலாம் என CBO கணித்துள்ளது.

இன்னும் கணக்கில் சேராத செலவுகள் :

CBO வெளியிட்டுள்ள 38 பில்லியன் டாலர் மதிப்பீட்டில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள், எதிர்கால மறுசீரமைப்பு பணிகள், வீரர்களுக்கான மருத்துவச் செலவுகள் மற்றும் வெளிநாட்டு உதவித் திட்டங்களுக்கான செலவுகள் சேர்க்கப்படவில்லை.

எனவே, போரின் உண்மையான பொருளாதார தாக்கம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

==================