US Supreme Court's ruling that sanctions imposed on countries around the world are illegal,  google
உலகம்

USA : உலக நாடுகள் மீதான ”கூடுதல் வரி சட்ட விரோதம்” : அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு, டிரம்ப் ஆவேசம்

உலக நாடுகள் மீது விதிக்கப்பட்ட தடை சட்ட விரோதம் என அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து இருப்பது, அதிபர் டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Kannan

உலக நாடுகள் மீது கூடுதல் வரி

US Supreme Court Strikes Down President Trump’s Tariffs : அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாம் முறையாக பதவி ஏற்ற பிறகு, இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் மீது கூடுதல் இறக்குமதி வரி விதித்தார்.

அப்போ 50% இப்போ 18% வரி

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நம் நாட்டில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் தற்போதுதான் 18 சதவீதமாக குறைக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று மிரட்டி உள்ளார்.

கூடுதல் வரிக்கு தடை - அமெரிக்க உச்ச நீதிமன்றம்

இந்தநிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் வரி சட்ட விரோதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு

அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வில் 6க்கு 3 என்ற கணக்கில் நீதிபதிகள் தடை உத்தரவு வழங்கினார்கள்.

நீதிபதிகள் சாமுவேல் அலிட்டோ, கிளாரன்ஸ் தாமஸ் மற்றும் பிரட் கவனாக் ஆகியோர் இந்த உத்தரவில் உடன்படவில்லை.

வரி விதிப்பு - நாடாளுமன்றத்திற்கே அதிகாரம்

அமெரிக்க தலைமை நீதிபதி ஜான்ராபர்ட்ஸ் தனது உத்தரவில்,’ அமெரிக்க அரசியலமைப்பு மிகத் தெளிவாக வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது.

ஆனால் டிரம்ப் அறிவித்த கூடுதல் வரிவிதிப்பு அதிகாரத்தின் எந்தப் பகுதியையும் சட்டமியற்றுபவர்கள் நாடாளுமன்றத்தில் ஒப்படைக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது’ என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரி விதிக்க அதிபரிக்கு அதிகாரம் இல்லை

ஐஇஇபிஏ சட்​டம் அதிபருக்கு வரி​களை விதிக்க அனு​மதி அளிக்​க​வில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு அதிபர் டிரம்பிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

நீதிமன்றம் வழங்கி இருக்கும் இந்த தீர்ப்பின் மூலம், அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டு இருப்பது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதிபர் டிரம்ப் ஆவேசம்

உலக நாடுகள் மீது விதித்த வரிகளை ரத்து செய்த அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் வெட்கப்படுவதாக அதிபர் ட்ரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவு பாதிக்காத வகையில், அமெரிக்க வர்த்தக விரிவாக்க சட்டத்தின் கீழ், உலக நாடுகள் மீது புதிதாக 10% வரி விதித்து அவர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

----------------