டிரம்பும், நோபல் பரிசும் :
US President Donald Trump Nobel Prize : உலக அளவில் கடந்த சில தினங்களாக அதிகம் கவனம் ஈர்த்தது என்னவென்றால், அமெரிக்க அதிபர் டிரம்பும், அமைதிக்கான நோபல் பரிசும் தான். 8 போர்களை நிறுத்தியதற்காக, இந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வந்தார். நோபல் பரிசை வழங்காவிட்டால், அது அமெரிக்காவை இழிவுபடுத்தும் செயல் என்றும் கூறி வந்தார்.
மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு
இந்த சூழலில், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே அமைதிக்கான நோபல் பரிசு தேற்று அறிவிக்கப்பட்டது. அதில் டிரம்பின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கு பதிலாக வெனிசுலா நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இது டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிபர் டிரம்பிற்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் வெளியாகி இருக்கின்றன.
1. முதலாவது நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படும் காலக்கெடு ஜனவரி 31ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. அதன்பிறகே, அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதாவது, இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அதிபர் டிரம்பின் பெயரை பிப்ரவரி ஒன்றாம் தேதிக்குப் பிறகு தான் பரிந்துரை செய்துள்ளன. எனவே, டிரம்பிற்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
2. இரண்டாவது அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்க 8 போர்களை நிறுத்தியதாக டிரம்ப் கூறி வந்தார். இவை அனைத்தும் பிப்ரவரி ஒன்றாம் தேதிக்கு பிறகு தான் முடிவுக்கு வந்தன.
3. மூன்றாவதாக அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிகள் நீண்ட காலமாக நிலைக்குமா? என்பது நிரூபிக்கப்படவில்லை. குறுகிய காலத்தில் சண்டையை நிறுத்துவதற்கும், மோதலின் அடிப்படை காரணங்களை தீர்ப்பதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. உதாரணத்திற்கு காசா போர் முதல்கட்டமாக நிறுத்தப்பட்டாலும், மீண்டும் சண்டை தொடங்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
4. டிரம்ப் தனது பாணியில் பல முறை “நான் உலக அமைதிக்காகச் செய்த பங்களிப்புகள் பெரிது” என்று வலியுறுத்தினாலும், உலக அரசியல் சூழ்நிலைகளில் அவரின் செயல்பாடுகள் உண்மையான மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை என்பது தான் உண்மை.
5. ஐந்தாவதாக நோபல் பரிசு குழு, உலக அமைதிக்கான செயல்பாடுகளில் கணிசமான மற்றும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் அல்லது மனிதாபிமான அடிப்படையில் செயலாற்றுபவர்களுக்கே அமைதிக்கான நோபல் பரிசை தர விரும்பும்.
இவை போன்ற காரணங்களே அதிபர் டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காமல் போக காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க : தகர்ந்த டிரம்ப் கனவு! அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா பெண்ணுக்கு
நோபல் குழு விளக்கம்
இது குறித்து விளக்கம் அளித்த நார்வேயைச் சேர்ந்த நோபல் பரிசு தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள ஜோர்கன் வாட்னே பிரிட்னெஸ், “ நோபல் பரிசு தேர்வு கமிட்டி, அமைதிக்கு வழிவகுக்கும் காரணிகள் குறித்து ஆயிரக்கணக்கான கடிதங்களை ஆண்டுதோறும் பெறுகிறது. எங்களின் முடிவை ஆல்பிரட் நோபலின் (நோபல் பரிசை அறிமுகப்படுத்தியவர்) செயல் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கிறோம்” என்று கூறினார்.