Venezuelan President Nicolas Maduro has been arrested and extradited to New York City 
உலகம்

போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு : ”நியூயார்க் சிறையில் மதுரொ”

வெனிசுலா அதிபர் நிக்​கோலஸ் மதுரொ, கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், நியூ​யார்க் நகரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Kannan

வெனிசுலா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்காவில் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு வெனிசுலாவே முக்கிய காரணம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். இதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளையும் விதித்த அவர், வரிகளையும் விதித்து அதிரடி காட்டினார்.

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்

இதற்கெல்லாம் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரொ அசைந்து கொடுக்காததால், யாரும் எதிர்பார்க்காத வகையில், வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரின் மீது அமெரிக்க ராணுவத்தின் சிறப்​புப் படை​யினர் நேற்று முன்​தினம் அதிகாலை தாக்​குதல் நடத்​தினர். ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் தொடுக்கப்பட்டது.

அதிபர் மதுரொ சிறைப்பிடிப்பு

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, வெனிசுலா அதிபர் நிக்​கோலஸ் மதுரொ (63) மற்​றும் அவரது மனை​வியை அமெரிக்க டெல்டா படை​யினர் சிறைபிடித்​தனர். பின்​னர், அவர்​களை போர்க் ​கப்பலில் அழைத்​துச் சென்​றனர். அதிபர் மதுரொ நாடு கடத்தப்பட்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்க சிறையில் மதுரொ

இந்தநிலையில், மதுரொவும் அவரது மனைவியும் அமெரிக்​கா​வின் நியூயார்க் நகருக்கு அழைத்​துச் செல்​லப்​பட்​டு, புரூக்​ளினில் உள்ள பெருநகர தடுப்பு மையத்​தில் சிறை வைக்​கப்​பட்​டனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு

அவர்​கள் மீது போதைப்​ பொருள் பயங்​கர​வாதம், அமெரிக்கா​வுக்​குள் டன் கணக்​கில் கோகைனை இறக்​குமதி செய்​தது மற்​றும் சட்​ட​விரோத ஆயுதங்களை வைத்​திருந்​தது ஆகிய குற்​றச்​சாட்​டு​கள் சுமத்தப்பட்டுள்ளன.

வீடியோ வெளியிட்ட அமெரிக்கா

அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை எக்ஸ் தளத்​தில் 61 விநாடிகள் ஓடும் ஒரு வீடியோவை வெளி​யிடப்பட்டு இருக்கிறது. அதில், மதுரோ அமெரிக்​காவை வம்​பிழுக்​கும் காட்​சிகளும், மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸை​யும் கைது செய்ய நடத்​தப்​பட்ட அதிரடி சோதனைக் காட்​சிகளும் இடம்பெற்றுள்ளன.

அந்த வீடியோ​வில், வெனிசுலா மீதான தாக்​குதல்​கள் குறித்து ட்ரம்ப் நடத்​திய செய்​தி​யாளர் சந்​திப்​பின் காட்​சிகளும் இடம்​பெற்றுள்​ளன. அப்​போது, அமெரிக்க பாது​காப்​புத் துறை அமைச்சர் பீட் ஹெக்​சேத், “மதுரோ வம்​பிழுத்​தார், அதன் விளைவை அனுப​வித்​தார்” என்று குறிப்​பிட்​டார்.

உலக நாடுகள் கண்டனம்

அமெரிக்காவின் தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 40 பேர் உயிரிழந்ததாக வெனிசுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெனிசுலா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு நாடுகள் தங்கள் கண்டனத்தையும், கவலையையும் பதிவு செய்து இருக்கின்றன.

ஐநா சபை கண்டனம்

ஐ.நா.பொதுச்செயலர் விடுத்துள்ள அறிக்கையில், “ வெனிசுலா மீது அமெரிக்கா தாக்​குதல் நடத்​தி​யது மோச​மான முன்​னு​தா​ரணத்தை ஏற்படுத்தியிருக்​கிறது என்று கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். இந்நிலை​யில், வெனிசுலா நாட்​டின் இடைக்​கால அதிப​ராக பொறுப்​பேற்​கு​மாறு துணை அதிபர் டெல்சி ராட்​ரிக்​ஸுக்கு (56) அந்​நாட்டு உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

அமெரிக்கா கட்டுப்பாட்டில் வெனிசுலா

ஆனால் இதை ஏற்க அமெரிக்க மறுத்து வருகிறது. தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் தான் வெனிசுலா அரசு செயல்பட வேண்டும் என்பதில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிடிவாதமாக உள்ளார்.

==============