ஈரான் மீதான போர்
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் நடத்திய தாக்குதல் 40 நாட்களை கடந்து விட்டது. ஈரானும் சளைக்காமல் பதிலடி கொடுப்பதால், அமெரிக்க சண்டை நிறுத்தத்தை அறிவித்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.
பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை
அதன் அடிப்படையில் இருநாடுகளுக்கும் மத்தியஸ்தராக இருந்து செயல்பட, பாகிஸ்தான் முன்வந்தது. அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
10 ஆண்டுகளில் முதல் நேரடி பேச்சு
கடந்த 10 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் நேரடிப் பேச்சுவார்த்தையாகும். 1979ல் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடைபெற்ற மிக உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையும் இது ஆகும்.
ஹோர்முஸ் ஜலசந்தி
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20% பங்கைக் கொண்டுள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளதால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு தான் அந்தப் பாதையைத் திறப்பதையும், தற்காலிகப் போர்நிறுத்தத்தை தொடர்வது பற்றிய தீர்மானிப்பதாக இருந்தது.
ஈரான் - அமெரிக்கா ஆலோசனை
ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோர் பங்கேற்றனர்.
அமெரிக்கா தரப்பில் ஜே.டி. வான்ஸ் உடன் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் பங்கேற்றனர்.
காரசாரமான ஆலோசனை
21 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது. பேச்சுவார்த்தையின் போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானியக் குழுவினர் கறுப்பு உடை அணிந்து வந்ததோடு, அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் உடமைகளையும் கொண்டு வந்திருந்தனர்.
ஈரானின் முக்கிய கோரிக்கைகள்:
* வெளிநாடுகளில் முடக்கப்பட்டிருக்கும் ஈரானியச் சொத்துக்களை விடுவிக்க வேண்டும்.
* ஹோர்முஸ் ஜலசந்தி மீது முழு கட்டுப்பாடு, அங்கு செல்லும் கப்பல்களிடம் போக்குவரத்து கட்டணம் வசூலிக்கும் உரிமை.
* போர்க்கால இழப்பீடு மற்றும் பிராந்திய அளவிலான போர்நிறுத்தம்.
பேச்சுவார்த்தை தோல்வி
ஆனால், ஹோர்முஸ் விவகாரத்தில் தடையற்ற போக்குவரத்து அவசியம் என்பதில் அமெரிக்கா உறுதியாக நின்றது. இதனால், உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்க துணை அதிபர் கருத்து
அமெரிக்கக் குழு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் (JD Vance) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜே.டி. வான்ஸ், "துரதிர்ஷ்டவசமாக ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இது அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் மிகப்பெரிய பின்னடைவு.
கோரிக்கைகளை ஏற்க தயாராக இல்லை
எங்களின் 'சிவப்பு கோடுகள்' (Red lines) என்ன என்பதை நாங்கள் தெளிவாகத் தெரிவித்து விட்டோம். அணு ஆயுதங்களை உருவாக்கக் கூடாது என்பது உள்ளிட்ட அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்துவிட்டது.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது நான் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் ஆறு முறை ஆலோனை நடத்தினேன்," என்று வான்ஸ் தெரிவித்தார்
பேச்சுவார்த்தை - ஈரான் கருத்து
இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை குறித்து ஈரான் அரசு தனது 'X' பக்கத்தில், "பேச்சுவார்த்தை நிறைவடைந்தது, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வார்கள். சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பேச்சுவார்த்தை தொடரும்" என்று பதிவிட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து இருப்பதால், மீண்டும் போர் மூளுமோ என்ற அச்சம் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
==========================