
புல்லட் ரயில்கள்
China Tests High Speed Bullet Train 281 Mph : புல்லட் ரயில்கள் என்றால் சீனா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட அயல்நாடுகள் தான் நினைவிற்கு வரும். பொதுவாக இந்த நாடுகளே உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவையை வழங்கி வருகின்றன. குறிப்பாக சீனா அடுத்தடுத்து புதிய மைல்கல்லை எட்டி வருகிறது. சமீபத்தில் CR450 மாடல் புல்லட் ரயிலை(China Bullet Train Model) தயாரித்து சோதனை ஓட்டம் விட்டது. ஷாங்காய் நகரில் இருந்து புறப்பட்டு செங்டு வரை இயக்கப்பட்டது. மணிக்கு 453 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி பரிசோதனை செய்தனர். இதன்மூலம் உலகின் அதிவேக புல்லட் ரயில் சேவை என்ற சோதனை என்ற பெருமையை பெற்றுள்ளது.
சீனாவின் CR400 புல்லட் :
இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் சராசரியாக மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சீனாவில் அதிவேகமாக இயக்கப்படும் ரயில் சேவை எது என்ற கேள்வி எழக்கூடும். அதற்கான பதில், CR400 என்ற மாடல் புல்லட் ரயிலானது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இது சர்வதேச அளவில் அதிவேக புல்லட் ரயில்களில் ஒன்றாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
உலகின் அதிவேக புல்லட் ரயில் அறிமுகம்
புதிய புல்லட் ரயில் CR450ஐ பொறுத்தவரை பல்வேறு விஷயங்களை அப்கிரேட் செய்து சீனா ரயில்வே நிர்வாகம் அசத்தியுள்ளது. எஞ்சினின் முனைப் பகுதியை 15 மீட்டராக நீட்டித்துள்ளனர். இது காற்றால் ஏற்படும் தடையில் இருந்து விடுவிக்க பெரிதும் உதவிகிறது. 20 செ.மீ அளவிற்கு மேற்தளத்தின் உயரத்தை குறைத்துள்ளனர். முந்தைய மாடலை காட்டிலும் 55 டன்கள் எடை குறைவானது. இவை அனைத்தும் CR450 புல்லட் ரயிலின் வேகத்தை அதிகரிக்கவும், எரிபொருளை திறம்பட பயன்படுத்தி கொள்ளவும் உதவுகிறது என்று ரயில் வடிவமைப்பாளர்கள், பொறியியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
CR450 புல்லட் ரயிலின் சிறப்பம்சங்கள்
குறிப்பாக 0 முதல் 350 கிலோமீட்டர் வேகத்திற்கு செல்ல வெறும் 4 நிமிடங்கள் 40 வினாடிகள் மட்டுமே எடுத்து கொள்கிறது. அதாவது 280 வினாடிகள் ஆகிறது. இது CR400 புல்லட் ரயிலை காட்டிலும் 100 வினாடிகள் குறைவு. அந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியில் சீனா மேம்படுத்தியுள்ளது.
எதிரெதிர் திசையில் இரண்டு புல்லட் ரயில்கள் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இவை ஒன்றை ஒன்று கடக்கும் இடத்தில் ஒருங்கிணைந்த ரயிலின் வேகம் என்பது மணிக்கு 896 கிலோமீட்டர் என்பது பெரிதும் ஆச்சரியமளிக்கிறது. இதுவும் ஒரு உலக சாதனையாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க : ’புல்லட் ரயிலில் பிரதமர் மோடி’ : இந்திய ஓட்டுனர்களுடன் சந்திப்பு
6 லட்சம் கிலோமீட்டர் சோதனை ஓட்டம்
வழக்கமாக எந்த ரயிலையும் குறிப்பிட்ட தூரம் ஓட்டி பார்த்துவிட்டு, அதன்பிறகு தான் பயணிகள் பயன்பாட்டிற்காக கொண்டு வருவர். அந்த வகையில் CR450 புல்லட் ரயிலுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சோதனை ஓட்டம் என்பது 6 லட்சம் கிலோமீட்டர். இதையொட்டி பல கட்டங்களாக தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. CR450 புல்லட் ரயில் மூலம் சர்வதேச அளவில் சீனா புதிய அடையாளத்தை உருவாக்கி, அதிவேகத்தில் உலக சாதனை படைத்திருக்கிறது என்றால் மிகையாகது.
பயன்பாட்டிற்கு வரவிருக்கும் மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்
அயல்நாடுகள் அனைத்தும் அதிவேகத்தில் கவனம் செலுத்தி அடுத்ததொரு அப்டேட்டை கொண்டுவரும் நிலையில், சீனா புதிதாக புல்லட் ரயில் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்நிலையில், இந்தியாவில் மும்பை – அகமதாபாத் இடையில் முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன என்று தெரியவந்துள்ளது. இந்தியாவும் மற்ற நாடுகளை விட தனித்துவமாகவும், திறம்பட செயல்பட்டு வரும் 2027ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.