ஜிதின் பிரசாதா உறுதிப்படுத்தினார்
Zoho Corporation Mail Service : சுதேசி இயக்கத்தை ஆதரிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கைக்கு இணங்க அனைவரும் உள்நாட்டு தயாரிப்பாக ஜோஹோவின் மெயிலுக்கு மாறி வருகின்றனர். மேலும், மத்திய அரசின் அமைச்சர்கள் முதல் அரசு வரை அனைவரும் மாறி வருவதை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்கள்
அப்படி மாற்றப்பட்ட கணக்குகளில், 7.45 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்குச் சொந்தமானவை என்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அறிவித்தது.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், தகவல் தொழில்நுட்ப துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
மக்களவையில் பதில் கூறிய அமைச்சர் ஜிதின் பிரசாதா
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சரான ஜிதின் பிரசாதா, மக்களவையில் அளித்த விரிவான பதிலில், நாட்டில் மொத்தம் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறினார்.
மேலும், இந்த முக்கிய மின்னஞ்சல் கணக்குகள் மாற்றும் செயல்பாடு, தேசிய தகவல் மையம் (NIC) வழியாகவே மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் சேவை
அரசு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் சேவைகளை வழங்கும் தளமாக என்.ஐ.சி. தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட முதன்மை வழங்குநராகச் செயல்படுகிறது. சோஹோவுடனான அரசின் ஒப்பந்தப்படி, இந்த செயல்முறையின் மூலம் உருவாக்கப்படும் அனைத்து தரவுகளின் மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் (IP) உரிமை அரசுக்கே இருக்கும்.
தேவைப்படும்போது தொடர்ச்சி மற்றும் சிக்கலில் இருந்து மீட்டெடுப்புக்கான அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் எடுத்துரைத்தார்.
ஜோஹோ தடையின்றி ஆதரவு தருகிறது
இந்த முக்கிய அம்சங்களை உறுதிப்படுத்தும் வகையில், இந்திய அரசு, தேசிய தகவல் மையம் (NIC) வழியாக, சோஹோ நிறுவனத்தை ஒரு "மாஸ்டர் சிஸ்டம் இன்டெகிரேட்டர்" (MSI) ஆகத் தேர்ந்தெடுத்துள்ளது.
சோஹோ, அனைத்து அரசுப் பயனாளர்களுக்கும் தடையின்றி ஆதரவளிக்கும் திறன் கொண்ட ஒரு வலுவான கிளவுட் அடிப்படையிலான மின்னஞ்சல் தீர்வை வழங்குவதை உறுதி செய்கிறது.
ஜோஹோ நிறுவனம் அனைத்து நிறுவனங்களையும் பின்னுக்கு தள்ளியது
இம்முறை, தொழில்முறை மேம்படுத்தல்கள், தற்போதுள்ள கணக்குகளின் தடையற்ற இடமாற்றம், மற்றும் வேர்ட் ப்ராசசர்கள், விரிதாள்கள் (spreadsheets), பிரசன்டேஷன் மென்பொருள் போன்ற நவீன அலுவலக உற்பத்தித்திறன் கருவிகளின் ஒருங்கிணைப்பையும் உறுதிசெய்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.
இது அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கமாகும். 2023 ஆம் ஆண்டில், மத்திய அரசு மின்னஞ்சல் கணக்குகளை என்.ஐ.சி.யின் அமைப்பிலிருந்து பாதுகாப்பான கிளவுட் சேவைக்கு மாற்றுவதற்காக ஒரு டெண்டரை வெளியிட்டது.
பல போட்டி நிறுவனங்களுக்கிடையே இந்த ஒப்பந்தத்தை சோஹோ நிறுவனம் வென்றது. இருப்பினும், மென்பொருள் உரிமங்கள், உள்கட்டமைப்பு, பயிற்சி செலவுகள் அல்லது 2023-24 நிதியாண்டு முதல் ஏற்படும் ஆண்டுச் செலவுகள் குறித்த தகவல்களை அமைச்சர் பிரசாதா வழங்கவில்லை.
என்கிரிப்ட் செய்யப்படும் ஜோஹோ மெயில்
இந்த மின்னஞ்சல் தளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பு, மிக முக்கிய அரசுத் தரவைப் பாதுகாக்கும் வகையில் கடுமையாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.
சேமிப்பு (at rest) மற்றும் பரிமாற்றம் (in transit) ஆகிய இரு நிலைகளிலும் அனைத்து மின்னஞ்சல் தரவுகளும் என்க்ரிப்ட் செய்யப்பட வேண்டும் என்று இந்தத் தீர்வு கட்டாயப்படுத்துகிறது. சோஹோ மெயில் என்பது, பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான சோஹோ கார்ப்பரேஷனால் தொடங்கப்பட்ட ஒரு பாதுகாப்பான மின்னஞ்சல் சேவையாகும்.
உலகளவில் டிரெண்டாகி வரும் ஜோஹோ
ஸ்ரீதர் வேம்பு மற்றும் டோனி தாமஸ் ஆகியோர் இணைந்து 1996 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை நிறுவினர். கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் துறையில் செயல்பட்டு வரும் சோஹோ, பிற நிறுவனங்களுக்குப் பயனளிக்கும் தயாரிப்புகளையும் தீர்வுகளையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம், இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியை சோஹோ மெயிலுக்கு மாற்றியதாக அறிவித்தார்.
அவர் தனது சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில், இந்த மாற்றத்தைத் தெரிவித்ததுடன், எதிர்காலக் குறிப்புக்காக தனது புதிய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரியையும் பொதுவெளியில் வெளியிட்டார்.
தற்போது ஜோஹோ நிறுவனத்தின் வளர்ச்சி இந்தியாவை தாண்டி உலகம் முழுதும் வளர்ந்து வரும் நிலையில், தற்போது சுதேசியின் மூலம் ஜோஹோ புது அவதாரத்தையும் எடுத்து வரும்நிலையில், ஜோஹோவின் வளர்ச்சிக்கு சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.