

ஏஐ வளர்ச்சியால் வேலை இழப்பு
Sridhar Vembu Latest Tweet about IT Employees Job : AI கடந்த சில ஆண்டுகளாகவே ஏஐ படுவேகமாக வளர்ந்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் AI பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.
இதனால் ஒரு பக்கம் நன்மைதான் என்றாலும் இன்னொரு பக்கம் பல துறைகளில் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இதனால், முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் இருந்து, வேலை வாய்ப்பு இழந்து ஊழியர்கள் வெளியில் செல்வது தொடர்ந்து, நடந்து வருகிறது.
இந்நிலையில், தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்து மென்பொருள் நிறுவனமான ஜோஹோ நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு ஐடி துறையின் தற்போதைய நிலவரம் குறித்து மனம் திறந்துள்ளார்.
வேலையை பார்த்துகொள்ளும் சூழல் ஏற்படும்
இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக ஐடி துறையில் இதனால் பெரியளவில் வேலையிழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவில் ஐடி துறையே ஒயிட் காலர் வேலையாக இருக்கிறது.
இளைஞர்களுக்கு எச்சரிக்கை
பல கோடி இளைஞர்கள் அதை நம்பி இருக்கும் சூழலில், இது முக்கியமான எச்சரிக்கையாகவே பார்க்கப் படுகிறது. இதுகுறித்து மனம் திறந்துள்ள ஸ்ரீதர் வேம்பு, AI மாடல்கள் தொடர்ந்து புதிய சாதனைகளை எட்டி வருவதால் கோடிங் செய்யும் ஐடி வல்லுநர்கள் வேறு வேலையைப் பார்க்க வேண்டி இருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
எந்தவொரு கோடிங் அறிவும் இல்லாமல் AI பயன்படுத்தி பகவத்கீதை செயலியை உருவாக்கியது குறித்த நெட்டிசன் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்திருந்த நிலையில், அதற்கு இவர் பதிலளித்துள்ளார்.
தான் உட்பட கோடிங் எழுதும் அனைவருமே வேறு வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் சீக்கிரமே ஏற்படும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஜெமினி சாட்பாட்டுடன் உரையாடலை பகிர்ந்த ஸ்ரீதர் வேம்பு
இது தொடர்பாக அவர் தனது பதிவில் "கோடிங் அனுபவம் இல்லாமல் ஒருவர் பகவத் கீதை செயலியை உருவாக்குகிறார். ஆந்த்ரோபிக் நிறுவனம் தங்கள் கிளாட் AI மூலம் ஒரு முழுமையான C கம்பைலரை உருவாக்கியுள்ளது.
இது ஒன்றும் சாதாரணக் காரியம் இல்லை. இந்தக் கட்டத்தில், கோடிங் எழுதும் ஐடி ஊழியர்களான நாம் மாற்று வழிகளைப் பரிசீலிப்பது நல்லது.
நான் என்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறேன். இதை நான் பீதியுடன் சொல்லவில்லை.ஆனால் முழுமையாக ஏற்றுக்கொண்டு அமைதியாகச் சொல்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
AI புரட்சி - மாறும் உலகம்
AI புரட்சியால் உலகம் மாறி வரும் சூழலில், உலகப் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கூகுளின் ஜெமினி சாட்பாட்டுடன் ஒரு விரிவான உரையாடலை நடத்தியதாகவும் வேம்பு கூறினார்.
ஜெமினியுடன் தான் நடத்திய உரையாடிய விவரங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
அதில் ஏஐ வந்த பிறகு உலகமும் உலக பொருளாதாரமும் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
புத்திசாலியாக பதிலளித்த ஏஐ
அது தொடர்பாக அவர் மேலும், "இது மிகவும் புத்திசாலித்தனமான ஒரு பொருளாதாரத் தத்துவ அறிஞருடன் விவாதிப்பது போல இருந்தது.
சொந்த வேலையை விமர்சிக்கும்படி நான் கேட்டேன், அதையும் கூட ஏஐ மிகச் சிறப்பாகச் செய்தது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், ஏஐ வருகையால் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்தும் அவர் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
எதிர்காலம் எப்படி இருக்கும்
ஏஐ யார் கைகளுக்குச் செல்கிறதோ, யார் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஏஐ பதிலுரைகள் இருக்கும் என்றும் இரண்டு வழிகளில் அது செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் ஸ்ரீதர் வேம்பு சுட்டிக்காட்டினார்.
எல்லாம் நல்லபடியாக நடந்தால்,தொழில்நுட்பம் மனித வாழ்க்கையின் ஒரு சிறிய பகுதியாக மாறிவிடும். அதன் பிறகு மனிதர்கள் தங்கள் வாழ்க்கை, குடும்பம், மண், நீர், இயற்கை, கலை, இசை, கலாச்சாரம், விளையாட்டு ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தேவையான நேரம் கிடைக்கும் என்றார்.
அதேநேரம் நேர்மாறாக எதாவது நடந்தால் ஒரு நபரிடம் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் குவியும் என்றும் இருண்ட உலகம் அமையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.