

ஜனநாயகன் வெளியீடு குறித்த முதல் அறிவிப்பு
Jana Nayagan Movie Case Update in Tamil : விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் இன்று (ஜன.9) திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
வழக்கு தொடுத்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்
ஆனால் சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது, தணிக்கை குழுவை சேர்ந்த ஒருவர் ஆட்சேபனை தெரிவித்ததால், சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, 'ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது.
ஜனநாயகன் முதல் தீர்ப்பு
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ’ஜன நாயகன்’ படம் தொடர்பான பிரச்சனைகளை, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களும் நீதிபதி பி.டி.ஆஷா தலைமையில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளிவந்தது.
நீதிபதி வெளியிட்ட தீர்ப்பு
நீதிபதி வெளியிட்ட தீர்ப்பில், “ஜனநாயகனுக்கு எதிரான புகார் ஆபத்தானது. அந்தப் புகாரை ஊக்கப்படுத்த முடியாது. ஒரு உறுப்பினரின் புகாரை கொண்டு படத்தை எப்படி மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். படத்திற்கு யுஏ சான்றிதழ் அளித்த பிறகு தலைவருக்கான அதிகாரம் முடிந்தது. மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து மீண்டும் தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், "மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவியுங்கள், விசாரணைக்கு ஏற்பது குறித்து பரிசீலிக்கப்படும். பிற்பகல் விசாரணைக்கு எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
21 ஆம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை
அப்போது தலைமை நீதிபதி, “தணிக்கை வாரியத்துக்கு எதற்காக உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதற்கான அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பினார். சென்சார் வாரியம் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கொடுக்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கை வரும் 21-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை என்று உறுதியாகியுள்ளது.