

பராசக்தி படக்குழுவினர்
Parasakthi Censor Board Cuts Scene Details in Tamil : பராசக்தி படம் திட்டமிட்டபடி ஜனவரி 10 அன்று வெளியாகவுள்ள நிலையில், அப்படத்திற்குத் தணிக்கை வாரியம் பரிந்துரைத்துள்ள பட்டியல் வெளியாகியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில்,சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா உள்ளிட்ட நடிகர்கள் இணைந்து நடித்து வெளிவரவுள்ள படம் பராசக்தி. இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
பராசக்திக்கு யு/ஏ சான்றிதழ் சிக்கல்
இந்நிலையில், படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக இப்படம் நாளை (ஜன. 10) அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு, படம் வெளியீடு தாமதம் ஆவதற்கு வாய்ப்புகள் உருவானது. இதற்கு முன்னதாக விஜயின் ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில்,பராசக்தி படத்திற்குக்கும் யு/ஏ சான்றிதழ் கிடைப்பது கேள்விக்குறியானது.
யு/ஏ சான்றிதழ் வழங்கும் முறை
பராசக்தி தணிக்கைக்காகச் சமர்ப்பிக்கப்பட்டபோது பலமுறை ஆய்வுகளுக்கு உள்ளானதாகக் கூறப்பட்டது. மேலும் சர்ச்சைக்குரிய 25-க்கும் மேற்பட்ட காட்சிகளை மாற்றி அமைக்க உத்தரவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், படத்தில் மாற்றங்கள் செய்யப் பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
மாற்றம் செய்யப்பட்ட இடங்கள்
அண்ணாதுரையின் புத்தகத் தலைப்பான “தீ பரவட்டும்” என்ற வாசகம் "நீதி பரவட்டும்" என்று மாற்றப்பட்டுள்ளது. “இந்தி என் கனவை அழித்தது” என்ற வசனம், ”என் ஒரே கனவை இந்தி திணிப்பு எதிர்த்தது” என்று மாற்றப்பட்டுள்ளது. “எங்களை நீக்கிவிட்டு” என்று தொடங்கி “இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்று வரும் அண்ணாதுரையின் புகழ்பெற்ற பேச்சு நீக்கப்பட்டுள்ளது.
25 இடங்களில் திருத்தப்பட்ட ஜனநாயகன்
மேலும், ”அரக்கி” என்ற சொல், “இந்தி அரக்கி” என்று மாற்றப்பட்டுள்ளது. தேசியத்திற்கு எதிராக வரும் வசனம் மற்றும் எழுத்துகள் நீக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் மொழித்திணிப்பு ஏற்பட்ட வரலாற்றைப் பேசும் பகுதிகளின் பின்னணி வசனங்கள் மாற்றப்பட்டுள்ளன. “வற சப்பாத்தி, இந்தி கத்துக்கிட்டு” என்பது உள்ளிட்ட சில சொற்கள் மற்றும் தகாத வார்த்தைகள் இடம்பெற்றுள்ள இடங்கள் மௌனமாக்கப்பட்டுள்ளன.
அஞ்சல் நிலையத்தின் பலகையில் மாட்டு சாணத்தைப் பூசுவதாக அமைக்கப்பட்ட காட்சிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. துப்பாக்கியால் சுடும் காட்சிகள், வன்முறைக் காட்சிகள் உள்ளிட்ட 25 இடங்களில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு,மாற்றப்பட்டுள்ளதாக பராசக்தி திருத்த பட்டியல் வெளியாகியுள்ளது.
பராசக்தி வசூல்
ஜனநாயகன் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் விவகாரத்தால் வெளியீடு தள்ளிப்போன நிலையில்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவரவுள்ள படங்களில் முதன்மை இடத்தையும், ஏரத்தாள திரையரங்குகளையும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமே பிடித்துள்ளது. இந்நிலையில், பராசக்தி படத்தின் முன்பதிவு பல வித சிக்கல்களுக்கு இடையில் உச்சம் தொட்டுள்ள நிலையில், படத்தின் வசூல் குறித்து பொறுத்திறுந்துதான் பார்க்கவேண்டும்.