

மக்கள் மனதில் நீங்க இடம் பிடிக்கும் படங்கள்
Sirai Movie Budget and Box Office Collection Worldwide : பெரிய பட்ஜெட், நடிகர்கள் பட்டாளம் என பிரமாண்டமாக உருவாக்கப்படும் படங்களை காட்டிலும், சிறு பட்ஜெட் அதேநேரம் அழுத்தமான கதை அம்சம், திரை வெளிப்பாடு என வெளிவரும் படங்களே சமீபகாலமாக ஹிட் அடித்து வருகின்றன.
விமர்சன ரீதியாக மட்டுமல்ல, வியாபார ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றியை பெறுகின்றன. அப்படி வெளியாகும் படங்கள் தற்போது உயர்ந்து வரும் நிலையில், அதிலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து, தொடர்ந்து வைரலாகும் படம் என்றால் அதன் எண்ணிக்கை சற்று குறைவே.
சிறை படக்குழு
அதன்படி, ரசிகர்களிடையே பெற்ற வரவேற்பு காரணமாக பாக்ஸ் ஆஃபீஸில் 3 மடங்கு அதிகமான வசூலை ஈட்டியது. நட்சத்திர நடிகர்கள், ஆடம்பரங்கள், ஏராளமான ஆண்களுக்கு நடுவே பிரபலமான நடிகையின் உணர்ச்சி பொங்கும் பாடல் என இப்படியான சினிமா சூத்திரங்களை தகர்த்தெறிந்து வெளியான படமே சிறை.
‘டாணாக்காரன்’ பட இயக்குநரும் நடிகருமான தமிழ் கதை எழுத, அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த ‘சிறை’ திரைப்படம் தான் அது.
அக்ஷய்குமார், அனிஷ்மா அனில்குமார் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் ஜீ5 ஓடிடியில் காணக்கிடைக்கிறது. ஜஸ்டின் பிரபாகர் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் மையக்கருத்து
அப்துல் ரவூஃப் (அக்ஷய்குமார்) என்ற விசாரணை கைதியை வேலூர் சிறையிலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு அழைத்து செல்லும் எஸ்கார்ட் பணி கதிரவனுக்கு (விக்ரம் பிரபு) கொடுக்கப்படுகிறது.
வேலூர் டூ சிவகங்கை பயணத்தில் நடக்கும் சம்பவங்கள், அத்துடன் அப்துல் ரவூஃப் ஏன் கொலையாளியானார்? அதற்கான பின்னணி காரணம் என்ன? என்பதுடன் கதையின் ஆன்மாவாக இருக்கும் காதலை போராடாமல் பேசும் படம் தான் ‘சிறை’.
காவல்துறைக்கு இருக்கும் அதிகாரத்தை எளிய மக்களுக்காக பயன்படுத்தினால் என்ன நடக்கும் என்பதை வெளிச்சமிட்டு காட்டுகிறது படம்.
எந்த இடமும் தேவையற்ற திணிப்பாக இல்லாமல், அடுத்தடுத்து கதையின் போக்கிலேயே படம் நகர்வது சோர்வை தராமல் தப்பிக்க வைத்து, திரைவிரும்பிகளை உயிர்ப்பிக்கிறது.
வணிக ரீதியான வசூல்
குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியின் பதட்டம் படம் முடியும்போதே அடங்குகிறது. காதல் காட்சிகள், காதலர்களுக்கு இடையிலான பிணைப்பு, நெகிழ வைக்கும் இறுதிக்காட்சி ஆகியவை இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்ததனால், படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, படம் பார்த்தவர்கள் மற்றவர்களை தூண்டும் ஆர்வமே, இதன் வணிக ரீதிக்கு, அசைக்க முடியாத அஸ்திவாரத்தை போட்டு உச்சம் பெற வழிவகுத்தது.
ஓடிடியிலும் நல்ல வரவேற்பு
இதைத்தொடர்ந்து, தியேட்டரில் மட்டுமல்ல, ஓடிடியிலும் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தினை, பிரபலங்கள் மற்றும் பலர் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதற்கு மத்தியில் இந்தப் படத்தின் வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் வசூல்
6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 'சிறை' திரைப்படம், உலகளவில் 31 கோடியே 58 லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
லாப சதவீதம் 426 மடங்கு
இதன் லாப சதவீதம் 426.33% ஆகும். திரையரங்குகளில் வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்து வசூல் சாதனையும் படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது.