

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா
Bollywood Actor Dharmendra Passed Away At Age 89 in Mumbai : பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் உள்ள நஸ்ராலி என்ற கிராமத்தில் கேவல் கிஷன் சிங் தியோல் மற்றும் சத்வந்த் கவுர் ஆகியோருக்கு டிசம்பர் 8ம் தேதி 1935ம் ஆண்டு தர்மேந்திரா பிறந்தார். தில் பி தேரா ஹம் பி தேரே என்ற காதல் நாடகத்தை அர்ஜுன் ஹிங்கோரானி இயக்கத்தில் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
பின்னர் தனது நடிப்பு திறமையால் 'ஆயி மிலன் கி பேலா', 'பூல் அவுர் பத்தர்', 'ஆயே தின் பஹார் கே', 'சீதா அவுர் கீதா', 'ராஜா ஜானி', 'ஜுக்னு', 'யாதோன் கி பாராத்', 'தோஸ்த்', 'ஷோலே', 'பிரதிக்ஞா', 'சரஸ்', 'தரம் வீர்' போன்ற பல படங்களில் சிறப்பாக நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். கடைசியாக 2023ல், கரண் ஜோஹர் இயக்கிய 'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவர் நடித்து இருந்தார்.
தர்மேந்திரா ஃபிலிம் ஃபேர்
1997ம் ஆண்டில், ஹிந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக ஃபிலிம் ஃபேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். வயதான போதிலும், தர்மேந்திரா தொடர்ந்து படங்களில் பணியாற்றினார், மேலும் பல படங்களில் நடித்தார்.அவரது வரவிருக்கும் படமான இக்கிஸ்-ஐ, ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார். இது டிசம்பர் 25, 2025 அன்று பெரிய திரையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
தர்மேந்திர குடும்ப பிண்ணனி
தர்மேந்திராவின் முதல் மனைவி பெயர் பிரகாஷ் கவுர். இரண்டாவதாக பிரபல நடிகை ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா என மொத்தம் 6 குழந்தைகள் தர்மேந்திராவுக்கு உள்ளனர்.
தர்மேந்திரா உடல்நலக்குறைவு
சில நாட்களுக்கு முன்னதாக 89 வயதான பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்து அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இதனிடையே, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவருடைய மனைவியும் நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார். இதனையடுத்து, நடிகர் தர்மேந்திராவின் உடல்நிலை தேறியதால் மும்பை தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தர்மேந்திரா இறுதிச்சடங்கு
இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்(Bollywood Actor Dharmendra Died in Mumbai). இதனை அறிந்து பல்வேறு திரை பிரபலங்கள் தர்மேந்திராவை காண அவரது வீட்டிற்கு வருகை புரிந்துள்ளனர். இதனால் தர்மேந்திரா வீட்டிற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.