

Sai Pallavi Speaks About Playing Sita in Ramayana Movie Ranbir Kapoor
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தில் சீதையாக நடித்த அனுபவம் குறித்து நடிகை சாய் பல்லவி பகிர்ந்து கொண்டுள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் கேஜிஃப் புகழ் யாஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ராமாயணா' திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இதில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இதன் வெளியீட்டுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் ட்ரைலர் வெளியீடு
சமீபத்தில் டெல்லியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட 'ராமாயணா' திரைப்பட நிகழ்வில் சிறப்பு ட்ரைலர் வெளியிடப்பட்டது. அந்த நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது.
சாய் பல்லவி உருக்கம்
"ராமாயணா திரைப்படத்தில் சீதை மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. கடவுளாக நடிப்பது என்றால் அது சாதாரணமானது கிடையாது; கண்டிப்புடன் மனதையும் ஆன்மாவையும் முழுமையாக ஒப்படைத்தால் மட்டுமே சிறந்த நடிப்பு வெளிப்படும்.
சீதையாக நடிக்க நான் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை; உண்மையிலேயே என்னை ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இக்கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அமைதியாக அமர்ந்து தியானிப்பேன்.
சீதையிடன் நான் வேண்டிக்கொண்டது இதைத்தான்
அப்போது, 'சீதாம்மா... என் மூலமாக நீங்கள் நடிக்கிறீர்கள். என்னிடமிருந்து என்ன வெளிப்பட்டாலும் அது நீங்கள் இப்படத்திற்காக விரும்பியதாகவே இருக்கும்' என வேண்டிப்பார்ப்பேன்.
படப்பிடிப்பில் மனதை நேர்மறையாகவும் தெளிவாகவும் வைத்துக்கொண்டது என் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த உதவியாக இருந்தது" என்று நெகிழ்ந்து பேசினார்.
முன்னதாக நடிகை சாய் பல்லவி கதையின் நாயகியாக நடித்த 'அமரன்' திரைப்படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
=====