

Indian Cinema Trend Devotional Mythology Movies Box Office
இந்திய சினிமாவின் புதிய ட்ரெண்ட்
“இந்திய சினிமாவில் இப்போது தேச பக்தி மற்றும் பக்திப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனால் பிற வகைப் படங்களை உருவாக்கும் வாய்ப்புகள் குறைந்து வருகின்றன” என்று பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப் சமீபத்திய பேட்டியில் கூறிய கருத்து, தற்போது திரையுலகில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சமீபகாலமாக வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் இனி வரவிருக்கும் திரைப்படங்களின் பட்டியலைப் பார்க்கும்போது, இந்திய சினிமாவின் போக்கு ஆன்மிகம் மற்றும் புராண கதைகளை நோக்கி திரும்பியிருப்பதை உணர முடிகிறது.
'ஹனுமன் அன்ஸ்' ஏற்படுத்திய மாபெரும் வசூல் சாதனை
நீம் கரோலி பாபாவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, இயக்குநர் விஷால் சதுர்வேதி ரூ.1.7 கோடி குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கிய 'ஹனுமன் அன்ஸ்' (Hanuman Ansh) திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.450 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பிரம்மாண்ட விளம்பரங்கள் ஏதுமின்றி, வெறும் ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் மூலமாகவே மக்கள் கூட்டத்தை திரையரங்குகளுக்கு ஈர்த்துள்ளது.
இப்படத்தின் மாபெரும் வெற்றியால், உத்தரகாண்டில் உள்ள நீம் கரோலி பாபாவின் கைஞ்சி தாம் ஆசிரமத்திற்கு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து திக்முக்காடி வருகின்றனர்.
பாலிவுட்டில் வரிசைகட்டும் புராண மற்றும் பக்திப் படங்கள்
ஹனுமன் அன்ஸ் படதைத் தொடர்ந்து, அடுத்த சில வருடங்களுக்கு பாக்ஸ் ஆபீஸில் புராணக் கதைகளின் ஆதிக்கமே இருக்கும் என கணிக்கும் வகையில் பல பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன:
ராமாயணா (Ramayana: Part 1)
நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யாஷ் மற்றும் ஹனுமானாக சன்னி தியோல் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப் படத்தின் வெற்றியே இந்த ட்ரெண்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என வர்த்தக நிபுணர்கள் கருதுகின்றனர்.
மகாகாளி (Mahakali)
பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகும் இப்படத்தில் அக்ஷய் கன்னா சுக்ராச்சாரியாராகவும், ஸ்ரேயா ரெட்டி மகாகாளியாகவும் நடிக்கின்றனர்.
மகாவதார் பரசுராம் (Mahavatar Parasuram)
கடந்த ஆண்டு ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.250 கோடி வசூலித்த 'மகாவதார் நரசிம்மா' அனிமேஷன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் அஸ்வின் குமார் இப் புதிய அனிமேஷன் படத்தை உருவாக்கி வருகிறார்.
ஜெய் ஹனுமான் (Jai Hanuman)
'காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி நடிப்பில், பிரசாந்த் வர்மா இயக்கத்தில் ஹனுமானின் பெருமையைச் சொல்லும் இத்திரைப்படம் ஹம்பி அஞ்சனாத்ரி பெட்டா மலைப்பகுதியில் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜூ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மகாவதார் (Mahavatar)
பிரபல இந்தி நடிகர் விக்கி கவுஷல் நடிப்பில் அமர் கவுசிக் இயக்கும் இப்புராணப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்கவுள்ளது.
வாரணாசி (Varanasi)
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் இப்படத்தில் ராமாயணக் கதையின் ஒரு பகுதி இடம்பெறுகிறது.
பிற படங்கள்: ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'கர்ணா', பீஷ்மர் மற்றும் துளசிதாசரின் வாழ்வைப் பேசும் 'ராம் போலா' மற்றும் ஷீரடி சாய்பாபாவின் வரலாற்றுப் படங்கள் உருவாகி வருகின்றன.
தமிழ் சினிமாவில் கடவுள்களின் பெயர்களில் தலைப்புகள்
பாலிவுட் புராணக் கதைகளில் கவனம் செலுத்த, தமிழ் திரையுலகில் கடவுள்களின் பெயர்களைத் திரைப்படங்களின் தலைப்பாக வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது:
சூர்யா நடிப்பில் வெளியான 'கருப்பு' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்', அருள்நிதி நடிக்கும் 'வேட்ட சாமி', தனுஷ் நடிப்பில் 'தமிழ் முருகன்' மற்றும் மாரி செல்வராஜ் தயாரிப்பில் 'மாகாளி' ஆகிய படங்கள் வரிசையாக உருவாகி வருகின்றன.
சினிமா நிபுணர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை
1931-க்கு முந்தைய மௌன படங்களின் காலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கடவுள்களின் கதைகளைப் பேசிய நிலையில், தற்போதைய 'ஜென்-ஸி' தலைமுறை கால கட்டத்தில் மீண்டும் இந்த ட்ரெண்ட் திரும்புவது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
இது குறித்துத் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "இதனை புதிய ட்ரெண்ட் என்று கூற முடியாது. ஆரம்ப காலத்தில் இருந்தே இதுபோன்ற படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. படைப்பாளர்களுக்கு நமது புராணங்களில் உள்ள ஏராளமான கதைகளை எடுக்கும் எண்ணம் வருவது இயல்பானதுதான். மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே தற்போது 10 படங்கள் உருவாகி வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
===============