வாதங்களை முன்வைத்த நீதிபதிகள்
Jana Nayagan Movie Censor Certificate Issue : நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 அன்று வெளியாக உள்ளதாக
இருந்தது, ஆனால்,அப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை வழங்க மத்திய தணிக்கை வாரியம் தாமதிப்பதால், தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது.இந்த வழக்கை இன்று நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். தணிக்கை வாரியத்தின் சார்பில் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேஷனும், படக்குழு சார்பில் சதிஷ் பராசரன் மற்றும் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைகுழு உறுப்பினரே புகார்
தணிக்கை குழு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பதில் மனு தாக்கல் செய்ய அனுமதித்தால் நீதிமன்றம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் முழுமையான பதில் அளிக்கப்படும் என்றும்
இப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது மத்திய அரசின் முடிவல்ல. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது. திரைப்படத்தில் பாதுகாப்புப் படைகளில் சில சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும். ஜனநாயகன் படத்துக்கு எதிராக புகாரளித்தவர் தணிக்கைக் குழு உறுப்பினர். சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்த பின்னரும் கூட படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தனர்.
இப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குவதில் எந்த உள்நோக்கமும் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,ஜனநாயகன் படக்குழு தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பெரும்பான்மை உறுப்பினர் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரை செய்துள்ளனர். பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வுக்கு அனுப்ப முடியும். ஆனால், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கின்றனர்” என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்படம் தள்ளிப்போவதற்கு அதீத வாய்ப்பு
இதனை தொடர்ந்து நீதிபதி பி.டி.ஆஷா, “ஆட்சேபங்கள் பரிசீலிக்கப்படவில்லை என்று மட்டுமே புகாரில் கூறப்பட்டுள்ளது, அந்த புகார் நிலைக்கத்தக்கதல்ல. படத்துக்கு யு/ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? யு/ஏ சான்றிதழ் ஒப்புதல் அளித்த குழுவில் இருந்த நபரே எப்படி தனி புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதனை தொடர்ந்து, ஜனநாயகன் படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கில் நாளை மறுநாளுக்குள் (ஜன.9) தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டார். ஜனநாயகன் படம் ஜன.9-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், நாளையோ அல்லது நாளை மறுதினம் காலையோ தீர்ப்பும் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போவதற்கு அதீத வாய்ப்பு இருப்பதாக கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்கள் விரக்தி
தவெக தலைவர் விஜயின் இறுதிப்படமாக ஜனநாயகன் திரைப்படம் இருக்கும் என்று தகவல் வெளியாகி நம்பப்பட்டது. இதனால், விஜய் ரசிகர்களை தாண்டி, சினிமா வட்டாரத்தில் இப்படத்திற்கு பெருமளவு எதிர்பார்ப்பு கிளம்பியது. கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி, வைரலாகியது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை நம்பி இருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது தணிக்கை சான்றிதழில் சிக்கல் ஏற்பட்டு, படத்தின் வெளியீடு தள்ளிப்போகும் என்று ரசிகர்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது.ஜனநாயகன் படம் நெருக்கடியில் சிக்கியுள்ளதால், தவெக தொண்டர்கள் முதல் அவரது ரசிகர்கள் வரை சமூக வலைதளங்களில் மீம்ஸ் மற்றும் டெம்ளேட்ஸ் மூலம் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.