
ஆஸ்கர் அகாடமி இந்த ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக நடிகர் கமல்ஹாசன் உட்பட 534 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பல பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன .
ஜூன் 26 அன்று, அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆஸ்கர் அகாடமி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான பட்டியலை அறிவித்தது.
இந்த பட்டியலில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக கமல்ஹாசன், ஆயுஷ்மான் குரானா ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஸ்மிருதி முந்த்ரா, ரணபீர் தாஸ், , கரண் மல்லி, மாக்சிமா பாசு, முதலானவர்களும் கில்லியன் ஆண்டர்சன், அரியானா கிராண்டே, செபாஸ்டியன் ஸ்டான், ஜெர்மி ஸ்ட்ராங் மற்றும் ஜேசன் மோமோவா போன்றோர் இடம்பெற்றுள்ளனர்.
ஏற்கனவே ஆஸ்கர் அகாடமியில் 10,143 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள நிலையில்,புதிய உறுப்பினர்களாக அழைக்கப்பட்டவர்கள் இதை ஏற்றுக்கொண்டால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 11,120 ஆக உயரும்.
புதிய உறுப்பினர்களாக அழைக்கப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் ஆண்கள் 41 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். ஆஸ்கர் அகாடமியின் இந்த அழைப்பை புதிய உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டால் ஆஸ்கருக்கு தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அவர்கள் பெறுவர்.
ஆஸ்கர் அகாடமியில் உறுப்பினராக சேர்வதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பானது தமிழ் சினிமாவிற்கான அங்கீகாரமாகவே பார்க்கப்படுகிறது.
===