
La. Ganesan Passed Away : தஞ்சாவூரை பூர்விகமாகக் கொண்ட இல.கணேசன், 1945 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி பிறந்தவர். சிறுவயதில் தந்தையை இழந்ததால் அண்ணன் அரவணைப்பில் வளர்ந்து வந்த இவர், ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஈடுபாடு கொண்டு திருமணம் செய்யாமலும் தனது வேலையை விட்டுவிட்டும் முழுநேரப் பணியாளராக இருந்து வந்தார்.
பின்னர், பாஜகவின் தேசியச் செயலராகவும், தேசிய துணைத்தலைவராகவும் பணியாற்றியவர். பின்னர் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 ஆம் ஆண்டில் பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளரான நிலையில், 2009 மக்களவைத் தேர்தலிலும், 2014 மக்களவைத் தேர்தலிலும் தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இருப்பினும், மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன்(Ela. Ganesan Biography), 2021 ஆம் ஆண்டில் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் மணிப்பூர் மாநிலத்தின் 17-வது ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து 2023 ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது(La. Ganesan) வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் படிக்க : இல. கணேசன் மறைவு, பிரதமர் மோடி இரங்கல் : தலைவர்கள் நேரில் அஞ்சலி
இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 6.23 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ மருத்துவர்கள் அறிவித்தனர்.