இந்தியாவின் வெற்றி
BCCI on Harmanpreet Kaur : மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி தென் ஆப்ரிக்காவிற்கும், இந்திய அணிக்கும் பலவித எதிர்பார்ப்புகளுடன் நவிமும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியாஅணி அபார வெற்றி பெற்றது. இதுவே,முதன்முறையாக மகளிர் அணி ஐசிசி தொடரை வென்று சாதனைப் படைத்துள்ளது.
உலககோப்பையை வென்ற ஆடவர் அணி
இதனால் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிசிசிஐ 50 கோடி ரூபாய்க்கு அதிகமான பரிசுத்தொகையை அறிவித்து கௌரவித்தது. இந்திய ஆண்கள் அணி இதற்கு முன் 50 ஓவர் உலக கோப்பையை 1983ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், அதன்பின் 2011ஆம் ஆண்டு எம்.எஸ். தோனி தலைமையில் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி இவர்களுக்கு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
அதில் "ஐ.சி.சி. மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி(India Wins ICC Women's World Cup 2025) பிரமிக்க வைக்கிறது. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்பாடு சிறப்பான திறமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக இருந்தது.
அணி வீராங்கனைகள் போட்டி முழுவதும் ஒற்றுமையாகவும் விடாமுயற்சியுடனும் விளையாடினர். நம் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, வரும் தலைமுறையினர் விளையாட்டுத் துறையைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளிக்கும்," என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்திய அணி சந்திப்பு
உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்த ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி வீராங்கனைகள் தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளனர். இது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தொடர்பு கொண்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து
இந்நிலையில், தற்போது முதன்முறையாக மகளிர் அணி 50 ஓவர் உலக கோப்பையை வென்றுள்ளது. ஆண்கள் மற்றும் மகளிர் என இந்தியாவுக்கு 50 ஓவர் உலக கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன்கள் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் கவுர் இணைந்துள்ளார். இதனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடியும், வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில், மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை கௌரவிக்கும் வகையில் பிசிசிஐ சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டருக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தாண்டி, உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.