
தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், திரைப்படங்களில் நடிப்பது மட்டுமன்றி தற்போது கார் ரேஸிலும் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடைபெற்ற 24எச். பந்தயத்தின் 991 பிரிவில் மூன்றாவது இடத்தையும், தொடர்ந்து ஜிடி4 பிரிவில் மதிப்புமிக்க ’ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்’ விருதையும் அஜித்குமார் ரேசிங் அணி வென்றிருந்தது.
இதற்கிடையில் ’குட் பேட் அக்லி’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த அஜித்குமார் அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு, இன்னும் சில மாதங்களுக்கு கார் ரேஸில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும், சினிமாவில் இருந்து தற்காலிமாக விலகப்போவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு மொட்டை அடித்தது போன்ற புது கெட்டப்பில் கார் ரேஸில் மும்முரம் காட்டி வருவது போன்ற அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
தற்போது, “க்ரவுட் ஸ்ட்ரைக் ஸ்பா ஜிடி சாம்பியன்ஷிப்” போட்டியில் “ப்ரோ-ஏஎம்” பிரிவில் கடுமையான சவால்களுக்கிடையில் சாதித்து அஜித்குமார் ரேசிங் அணி வீரர்கள் ஃபேபியன், மேத்தியூ முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.
கடுமையான சவால்களையும் மீறி, திறமையாலும் மனோபலத்தாலும் தங்களுடைய வீரர்கள் இந்த வெற்றிக்கனியை பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் அஜித்குமார் வெற்றிபெற்ற வீரர்களின் புகைப்படத்தோடு ’அஜித்குமார் ரேசிங்’ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற 2 பந்தயங்களில் ’அஜித்குமார் ரேசிங் அணி முறையே மூன்று மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்த நிலையில்,தற்போது நடைபெற்ற பந்தயத்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
===