

ரெக்கார்ட் படைத்தார் பும்ரா
india vs southafrica பும்ரா படைத்த வரலாற்றுச் சாதனை கட்டாக்கில் நடைபெற்ற இப்போட்டியில் 3 ஓவர்கள் வீசிய பும்ரா, 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் கேசவ் மகாராஜ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்தியப் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார்.
100 விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில்
கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் - டெஸ்ட், ஒருநாள், டி20யில் - தலா 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்களின் பட்டியலில் பும்ரா இணைந்துள்ளார்.
இந்தச் சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று வடிவங்களிலும் 100+ விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியல்: லசித் மலிங்கா (இலங்கை) டிம் சவுதி (நியூசிலாந்து) ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்) ஷாஹீன் அப்ரிடி (பாகிஸ்தான்) ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) என தொடர்ந்துள்ளது.
அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா
முன்னதாக டாஸ் தோற்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பம் சரியாக அமையவில்லை. சுப்மன் கில் (4), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (12) ஆகியோர் லுங்கி இங்கிடியின் பந்துவீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அபிஷேக் சர்மா 17 ரன்களில் வெளியேறினார்.
அணி இக்கட்டான நிலையில் இருந்தபோது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, தென்னாப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 28 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் குவித்தார்.
அவருக்குத் துணையாகத் திலக் வர்மா (26), அக்சர் படேல் (23) ஆகியோர் கை கொடுக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்தது.
வெற்றியை பதிவு செய்த இந்தியா
176 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே டி காக்கை (0) அர்ஷ்தீப் சிங் வெளியேற்றினார்.
தொடர்ந்து ஸ்டப்ஸ் (14), மார்க்ரம் (14) என வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன. டெவால்ட் பிரேவிஸ் மட்டும் 22 ரன்கள் எடுத்துப் போராடினார். ஆனால் அவரும் பும்ராவிடம் வீழ்ந்தார். வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
12.3 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து வெறும் 74 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. இந்திய அணி 101 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது என்பது குறிப்பிட்டத்தக்கது.
======