

India beats South Africa in first ODI by 17 Runs Highlights in Tamil : தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் சதம் அடித்த விராட் கோலி சச்சினின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார். முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் ஒரு நாள் போட்டிகளில் உலகசாதனை ஒன்றை படைத்துள்ளார்.
தென்னாப்பரிக்கா-இந்தியா மோதல்
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்களை குவித்தது. அதிரடியாக விளையாடிய விராட் கோலி, 7 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் சேர்த்தார்.
ஆரம்பம் முதலே தடுமாறிய தென்னாப்பிரிக்கா
கடைசி கட்டத்தில் கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜாவின் அதிரடியால் அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப்பின் அசத்தலான பந்துவீச்சால், 11 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறிய தென் ஆப்பிரிக்கா. மேத்யூ மற்றும் ஜேன்சனின் அதிரடி ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டது.
1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை
கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 2 ஆவது பந்தை எதிர்கொண்ட போச், அதனை சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால், ரோகித் ஷர்மா கைகளில் பந்து அகப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவின் வெற்றிப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-க்கு பூஜ்ஜியம் என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
சதம் அடித்த விராட்
மேலும் ராஞ்சியில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா வீரர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்த விராட் கோலி, சதம் அடித்தார். இதன் மூலம், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 52 சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி படைத்தார். ஒட்டுமொத்த அளவில் விராட் கோலி 83-வது சதத்தினை சர்வதேச அரங்கில் பதிவு செய்துள்ளார்.
சச்சின் சாதனையை முறியடித்த கோலி
மேலும் ஒரு ஃபார்மெட்டில் அதிகமான சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி ஏற்படுத்தியுள்ளார். முன்னதாக இந்த சாதனை டெஸ்ட் ஃபார்மெட்டில் 51 சதங்கள் அடித்திருந்த சச்சின் வசம் இருந்தது.
அந்த வகையில் சச்சின் வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ளார் விராட் கோலி.அது மட்டுமின்றி தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக 6 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
ரோஹித் சர்மா சாதனை
இதே போன்று, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான போட்டியில் 3 சிக்ஸர்களை பறக்க விட்ட ரோகித் சர்மா, பாகிஸ்தான் வீரர் அப்ரிடியின் சாதனையை முறியடித்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், 352 சிக்ஸர்களுடன் ரோகித் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 229 சிக்ஸர்களுடன் 5 ஆவது இடத்தில் உள்ளார். ஒரே ஆட்டத்தில் இருவரும் புதிய சாதனையை படைத்துள்ளதை, கோலி, ரோஹித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
====