

The NHAI has ordered the imposition of a ₹10,000 fine if an ambulance fails to reach the accident site on national highways within 10 minutes.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் புதிய வழிகாட்டுதல்
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நடக்கும் இடங்களுக்கு ஆம்புலன்ஸ்கள் குறித்த நேரத்தில் வராமல் தாமதம் செய்வதாகச் சாலை பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்றக் குழுவும் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதன் பின்னணியில், அவசரகால நடவடிக்கைகளில் தாமதத்தைக் குறைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
10 நிமிடக் கெடுவும் அபராதமும்
புதிய விதிகளின்படி, 10 கி.மீ. சுற்றளவுக்குள் விபத்து நடந்தால், ஆம்புலன்ஸ் 10 நிமிட நேரத்துக்குள் அந்த இடத்தைச் சென்றடைய வேண்டும். தவறினால் ஒரு தாமதத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல், அவசர கால அழைப்பைப் புறக்கணித்தாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
தூரத்திற்கு ஏற்ப நேர அனுமதி
10 கி.மீ. சுற்றளவைத் தாண்டிய பகுதியில் விபத்து நடந்தால், அந்த விகிதாச்சாரத்துக்கு ஏற்ப நேரத்தை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்கப்படும். ஆம்புலன்ஸில் பொருத்தப்பட்ட ஜி.பி.எஸ். கருவி மூலம் இந்த நேரம் சரிபார்க்கப்படும்.
ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனை
விபத்து அழைப்பை ஏற்றுக்கொண்ட ஒரு மணி நேரத்திற்குள், விபத்தில் பாதிக்கப்பட்டவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். தவறும் பட்சத்தில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அவசர உதவி எண் '1033'
சுமார் 50 ஆயிரம் கி.மீ. நெடுஞ்சாலைகளில் 3 ஆயிரம் ஆம்புலன்ஸ்கள், 1,000 ரோந்து வாகனங்கள் மற்றும் கிரேன் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை விபத்துகளுக்காக '1033' என்ற உதவி மைய எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் நடவடிக்கையால் துரித நேரத்தில் மருத்துவ உதவி
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
=====