

மாநில கட்சிகள் எதிரி போல தேசிய கட்சிகளும்
Ambernath Municipal Election 2026 : அதாவது, திமுக - அதிமுக இதுவரை கூட்டணி வைத்ததும் இல்லை, இனியும் கூட்டணி வைக்கும் வாய்ப்பும் இல்லை எனலாம். ஏனென்றால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு கட்சிகள் மட்டுமே தமிழ்நாட்டை ஆட்சி செய்து வருகின்றன, இரு கட்சிகளே முன்னணி கட்சியாகவும் உள்ளன. அதேபோலவே, தேசிய அளவில் காங்கிரஸ் - பாஜக இணைவது கடினம்.
கைகோர்த்த பாஜக- காங்கிரஸ்
ஆனால், ஓரங்கட்டப்பட்ட சிவசேனா தற்போது மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத் நகராட்சியில் பாஜகவினர், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தலைமை பதவியை கைப்பற்றி உள்ளது பெரும் அதிர்ச்சியை கிளப்பி உள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. அக்கூட்டணியில் ஷிண்டே சிவசேனா கட்சியும் இருக்கிறது. மேலும், துணை முதலமைச்சராகவும் ஏக்நாத் ஷிண்டே செயல்பட்டு வருகிறார்.
பாஜக அதிருப்தியில் சிவசேனா
இந்தச் சூழலில், ஷிண்டே சிவசேனா கட்சியை ஓரங்கட்டி, காங்கிரஸ் உடன் இணைந்து அம்பர்நாத் நகராட்சியை பாஜக கைப்பற்றியிருக்கிறது. பாஜக மேயருக்கு காங்கிரஸ் ஆதரவு காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்ததன் மூலம் அம்பர்நாத் மேயராக பாஜகவின் தேஜஸ்ரீ கரண்ஜூலே தேர்வாகி உள்ளார்.
இவருக்கு மொத்தம் 32 கவுன்சிலர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. பாஜகவின் 16 கவுன்சிலர்கள், காங்கிரஸ் கட்சியின் 12 கவுன்சிலர்கள், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 4 கவுன்சிலர்கள் ஆகியோர் ஆதரவு கொடுத்துள்ளனர். அம்பர்நாத் நகராட்சியில் ஷிண்டே சிவசேனா கட்சிக்கு பாஜக மீது கடும் அதிருப்தி எழுந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
குற்றச்சாட்டை மறுத்த பாஜக
சிவசேனா கடும் விமர்சனம் பாஜக தங்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக இதுகுறித்து ஷிண்டே சிவசேனாவின் எம்எல்ஏ பாலாஜி கினிகர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "காங்கிரஸ் இல்லாத இந்தியா என தொடர்ந்து பேசும் கட்சி (பாஜக) இப்போது காங்கிரஸ் கட்சியுடன் இணைந்துள்ளது. இது சிவசேனாவின் முதுகில் குத்துவது போன்றதாகும். இது மோசமான கூட்டணி" என கடுமையாக விமர்சித்தார். எனினும், சிவசேனாவின் குற்றச்சாட்டை பாஜக முற்றிலும் மறுத்துள்ளது.
பாஜகவின் விளக்கம்
சிவசேனாவுடனான கூட்டணிதான் உண்மையிலேயே மோசமான கூட்டணியாக இருந்திருக்கும் என்று பாஜக துணைத் தலைவர் குலாப்ராவ் கரஞ்சுலே பாட்டீல் சாடினார். மேலும், அம்பர்நாத் நகராட்சியில் சிவசேனாவுடன் இணைந்து விரிவான கூட்டணிக்கு பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டது என்றும் ஆனால் ஷிண்டே சிவசேனா தலைமையிடம் இருந்து எந்தவிதமான நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை என்றும் குலாப்ராவ் கரஞ்சுலே பாட்டீல் தெரிவித்தார். காங்கிரஸ் உடன் பாஜக இணைந்ததன் மூலம் அம்பர்நாத் நகராட்சியில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.