

இலவசமாக இயங்கும் ரயில்
nangal free train பொதுவாக பொதுப்போக்குவரத்து எதுவானாலும் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது என்பது பெருங்குற்றமாகும். அதிலும் குறிப்பாக ரயிலில் பயணம் செய்யும்போது, டிக்கெட் வாங்க வேண்டும். டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.
75 ஆண்டுகளாக இலவச சேவை
ஆனால், இந்த கூற்றுக்கு மாறாக இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளாக பயணிகளுக்கு இலவச சேவையை வழங்கிவரும் ஒரு ரயில் உள்ளது. இந்த இந்திய ரயில் தினமும் முற்றிலும் இலவசமாக இயங்கி வருகிறது.
1948-ல் தொடங்கிய ரயில் சேவை
பக்ரா-நங்கல் என்ற பெயரில் இயங்கும் ரயிலானது, பஞ்சாபின் நங்கல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ராவுக்கும் இடையே 13 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இது அழகிய சட்லஜ் நதி மற்றும் சிவாலிக் மலைகளின் வழியாகச் செல்கிறது. இந்த ரயில் சேவை 1948இல் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஆசியாவின் மிக உயரமான அணைகளில் ஒன்றான பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்திற்காக தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்வதற்காக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அன்றிலிருந்து இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. 1953ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டன. இந்த ரயிலின் சீட்கள் எளிமையாக இருந்தாலும், இது ரயிலின் நீண்ட வரலாற்றைப் பிரதிபலிக்கிறது.
ரயில் இலவசமாக இயங்குவதற்கான காரணம்
பக்ரா-நங்கல் அணையின் வரலாற்று முக்கியத்துவத்தை கௌரவிக்கும் வகையிலும், உள்ளூர்வாசிகளுக்கு இலவச பயண வசதிகளை வழங்குவதற்காகவும், பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB) இந்த ரயிலை இலவசமாக இயக்க முடிவு செய்தது.
இருப்பினும், இந்த ரயில் இந்திய ரயில்வேயின் கீழ் இல்லை. இது பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தால் (BBMB) இயக்கப்படுகிறது.
சிறந்த அனுபவமாகும் இலவச ரயில் பயணம்
ஒரு மணி நேரத்திற்கு 18 முதல் 20 லிட்டர் எரிபொருள் செலவழித்தாலும், இந்தப் பகுதி மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அணை கட்டுமானத்தில் பங்கேற்றவர்களின் நினைவாகவும் இந்தப் பயணம் இலவசமாகத் தொடர்கிறது.
இந்த ரயிலில் தினமும் சுமார் 800 பேர் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் 3 சுரங்கப்பாதைகள் மற்றும் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயிலில் பயணம் செய்வது உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் ஒரு சிறந்த அனுபவமாகும்.
சிவாலிக் மலைகள் மற்றும் சட்லஜ் நதியின் மீது கட்டப்பட்ட பாலங்கள் வழியாக செல்லும் இந்தப் பயணம், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருகிறது.
ஆடம்பர வசதிகள் இல்லாவிட்டாலும், அதன் மர சீட்டுகளும், பழங்கால ரயில் பெட்டிகளும் நம்மை பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அரசாங்கங்கள் மாறியிருந்தாலும், ரயில்வே அமைப்பில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஒரு சேவை மட்டும் மாறாமல், அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து இயங்கி வருவது பொதுமக்களை நெகிழ்ச்சியடைய செய்கிறது என்றால் இன்றியமையாதது.