

பீகார் வாக்கு எண்ணிக்கை :
Annamalai on Bihar Assembly Election 2025 Results : பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்நிலையில், முன்கூட்டியே அறிவித்தபடி, நவம்பர் 14 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளிவரும் என்றபடி, இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
வெற்றி கொண்டாடத்தில் தொண்டர்கள்
இதன் முடிவு மாலை 4 அல்லது 5 மணிக்கு மேல் தெரியவரவிருக்கும் நிலையில், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. தற்போது வாக்கு நிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னிலை, வெற்றிக்கான அறிகுறி என தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் பட்டாசுடன் கொண்டாடத்திற்காக காத்திருக்கின்றனர்.
தேர்தல் முடிவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள்
பெரும் எதிர்பார்ப்புகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பீகார் தேர்தலின் முடிவு எப்படி இருக்கும் என சில கருத்து கணிப்புகள் முன்கூட்டியே வெளிவந்தாலும், தேர்தல் ஆணையத்தின்படி தேர்தல் முடிவுகளுக்கு, பீகார் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அதன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் காத்திருக்கின்றனர். அதேசமயம், டுவிட்டர் மற்றும் சமூக வலைதளங்களில் பீகார் தேர்தல் முடிவுக்கு, சம்மந்தமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
அண்ணாமலை டுவீட்
அதன்படி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெற்றி உறுதி என்பதை வெளிப்படையாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட பதிவில்,பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து வரலாற்றை உருவாக்கியுள்ளனர், நமது அன்பான பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்குத் தலைமையின் மீதான தங்கள் மகத்தான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளது
மேலும், @narendramodi avl மற்றும் பீகார் முதல்வர் திரு. @NitishKumar avl அவர்களின் திறமையான நிர்வாகம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வெற்றி, பீகாரின் ஒவ்வொரு சகோதர சகோதரியும் வளர்ச்சி சார்ந்த எதிர்காலத்தில் வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
அதிகாரமளித்தல், செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கான NDA யின் அர்ப்பணிப்பு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளது, தவறாக வழிநடத்தவும் பிளவுபடுத்தவும் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் டுவீட்
இந்த முடிவு, குறுகிய, பிரிவினைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை விட முன்னேற்றம், நல்லாட்சி மற்றும் தேசிய நலன் எப்போதும் மேலோங்கும் என்ற செய்தியை நாட்டிற்கு வழங்குகிறது என்று பதிவிட்டுள்ளார். பீகார் தேர்தலின் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவு வெளிவருவதற்குள், வாக்கு விகிதத்தின் முன்னிலைப்படி வெற்றியை வெளிப்படையாக பதிவிட்டுள்ள அண்ணாமலையின் புகைப்படத்துடன் கூடிய டுவீட் வைரலாகி வருகிறது.