

நயினார் நாகேந்திரன் அறிக்கை
Nainar Nagendran criticized DMK on Secondary School Teachers Protest : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும்' என்று தேர்தல் வாக்குறுதி எண் 311ல் முழங்கிவிட்டு, நான்கரை ஆண்டுகளாக வழங்காமல் ஏமாற்றி, இடைநிலை ஆசிரியர்களைப் போராடும் நிலைக்குத் தள்ளி, குண்டுகட்டாகக் கைது செய்வதோடு, தற்போது போராடும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்கப்படாது எனத் திமுக அரசு அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது.
நாடக விழா நடத்திய திமுக
ஏற்கனவே பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கொடுத்த வாக்குறுதி எண் 181ஐ வீசி எறிந்ததோடு, தற்போது இருக்கும் ஊதியத்தையும் பிடித்தம் செய்து, ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பது அராஜகமானது என்று விமர்சித்துள்ள அவர், பல கோடி செலவழித்து 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று நாடக விழா நடத்தத் தெரிந்த திமுக அரசுக்கு, சம ஊதியம் வழங்கப் பணமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாணவர்கள் நலன் காக்க திமுக அரசு முனைய வேண்டும்
மேலும், பள்ளிக்கல்வித்துறையின் பொற்காலம் என்று முழங்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு,அரசுப்பள்ளி மாணவர்களின் நலன் கருதியும், இடைநிலை ஆசிரியர்களின் குடும்பங்களின் நலன் கருதியும்,கொடுத்த வாக்குறுதிப்படி சம ஊதியம் வழங்க மனமில்லையா என்றும் போராடும் ஆசிரியர்களை முடக்கும் சர்வாதிகாரப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிமடுத்து, சம ஊதியம் வழங்கி, மாணவர்கள் நலன் காக்க திமுக அரசு முனைய வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.