

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு (Prescription) அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட வேண்டிய மருந்துகள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க, நாடு முழுவதும் உள்ள மருந்து கடைகளில் சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக்க ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக மருந்துகள் விதிகள், 1945-ல் திருத்தம் செய்யும் வகையில் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி வரைவு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிகள் முக்கியமாக Schedule H, H1 மற்றும் X பிரிவுகளில் உள்ள மருந்துகளுக்கு பொருந்தும்.
இவை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் விற்கக் கூடாத மருந்துகள்.
இதில் சில ஆன்டிபயாட்டிக் மருந்துகள், மனநல சிகிச்சை மருந்துகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான மருந்துகளும் அடங்கும்.
வரைவு விதிகளின்படி, மருந்து கடைகளில் நிறுவப்படும் சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை பாதுகாக்கப்பட வேண்டும்.
பின்னர் ஏதேனும் புகார் அல்லது விசாரணை எழுந்தால், அந்த பதிவுகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் பரிந்துரை இல்லாமல் சில மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக ஆன்டிபயாட்டிக் மருந்துகள் மற்றும் தவறாக பயன்படுத்தப்படக்கூடிய சில கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் எளிதாக கிடைப்பது குறித்து சுகாதாரத் துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவு முதலில் மருந்துகள் ஆலோசனைக் குழு (DCC) முன் விவாதிக்கப்பட்டது.
பின்னர் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (DTAB) உறுப்பினர்களின் பரிசீலனைக்கும் அனுப்பப்பட்டது.
இரு குழுக்களும் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது இது ஒரு வரைவு அறிவிப்பாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து கருத்துகள் மற்றும் எதிர்ப்புகள் 30 நாட்களுக்குள் பெறப்படும்.
அதன் பின்னர் இறுதி விதிகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதி அமலுக்கு வந்தால், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கப்படும் மருந்துகளின் விற்பனையை கண்காணிப்பது எளிதாகும்.
அதே நேரத்தில் மருந்து கடைகளின் செயல்பாடுகளில் கூடுதல் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஏற்படும் என சுகாதார அமைச்சகம் நம்புகிறது.
=======================