

ராஜ்நாத் சிங் உரை
Defence Minister Rajnath Singh Remark on Sindhu Maganam : டெல்லியில் நடந்த சிந்து சமாஜ் மாநாட்டில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் சிந்து மாகாணம் மீண்டும் இந்தியாவுடன் இணையலாம் என்று தெரிவித்துள்ளார்.
புனிதமான சிந்து பகுதி
பிரிவினையின் போது இந்தியாவின் சிந்து பகுதியில் உள்ள நிலப்பரப்பு பாகிஸ்தானுக்கு வலுக்கட்டாயமாகக் கொடுக்கப் பட்டது. ஒவ்வொரு இந்துவும் புனிதமாகக் கருதும் சிந்து நதி பாயும் சிந்து மாகாணம் சிந்து சமவெளி நாகரீகம் தோன்றிய இடமாகும்.
அத்வானி சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்
சிந்து சமூகத்தினரின் பூர்வீக நிலமான சிந்து மாகாணத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த பெரும்பான்மையான இந்துக்கள் பிரிவினையின் போது பலர் தப்பித்து இந்தியாவுக்கு வந்தனர்.
இந்தியாவில் இருந்து சிந்து நிலப்பகுதி பிரிக்கப்பட்டதை அங்குள்ள இந்துக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென முன்னாள் துணை பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான எல்கே அத்வானி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானால் சிந்துவில் வாழும் இந்துக்கள் பாதிப்பு
மேலும் சிந்து மாகாணத்தில் வாழ்ந்த இஸ்லாமியர்களும் சிந்து நதி நீரைப் புனிதமாகக் கருதியதாகவும் அவர் பதிவு செய்துள்ளார். வேறு வழியில்லாமல் அங்கேயே வாழ்ந்துவரும் இந்துக்களில் பலர் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமிய நாடான பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்துக்கள் அந்நாட்டு அரசால் கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட பல கொடுமைகளை இன்றும் சந்தித்து வருகின்றனர்.
இப்படி இந்தியாவின் அண்டை நாடுகளில் சிறுபான்மையான இந்துக்கள் படும் துன்பங்களைத் துடைக்கும் வகையில் தான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குடியரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் ஒரு பகுதி சிந்து மாகாணம்
எல்லைகள் நிரந்தரமானவை அல்ல என்று கூறிய ராஜ்நாத் சிங், இப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்கும் சிந்து மாகாணம், நாகரீக ரீதியில் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது என்றும், ஒருவேளை நாளை சிந்து இந்தியாவுக்குத் திரும்பக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ராணுவ நடவடிக்கை இல்லாமல் திரும்ப பெற முடியும்
முன்னதாக, கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மொராக்கோ சென்றிருந்த ராஜ்நாத் சிங் அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடம் பேசும் போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை எதிர்த்து வருவதாகவும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எந்த வித தீவிர ராணுவ நடவடிக்கை இல்லாமலேயே இந்தியா திரும்பப் பெற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் எக்ஸ் பதிவு
சிந்து விரைவில் இந்தியாவுக்குத் திரும்பக்கூடும் என்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ள கருத்தை வரவேற்றுள்ள பிரபல சிந்து தலைவரும் ஜெய் சிந்து முத்தஹிதா மஹாஸ் அமைப்பின் தலைவருமான ஷாஃபி பர்பத், ராஜ்நாத் சிங்கின் நிலைப்பாட்டை ஒப்புக் கொள்வதாகவும், சிந்துதேசத்தின் நீண்டகால சுதந்திர விருப்பத்துக்கும் இந்தியாவுடனான வரலாற்று உறவுக்கும் ஒரு தார்மீக மற்றும் அரசியல் ஊக்கமாக இருப்பதாகவும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவுடனான கூட்டாட்சிக்கு சிந்து தேசம் தயார்
மேலும், சிந்து தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையேயான “பரஸ்பர மரியாதை, இறையாண்மை மற்றும் வரலாற்று, கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளின் அடிப்படையில், இந்தியாவுடனான ஒரு கூட்டாட்சி உறவுக்குச் சிந்துதேசம் எப்போதும் தயாராகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.