மாட்டிறைச்சி வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை : “தண்டிக்காவிட்டால் பசுக்களே அழிந்துவிடும்” : நீதிமன்றம் அதிரடி!

குஜராத்தில் பசுவதை தொடர்பான வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கலோல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2024-ல் 277 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது...
Gujarat Court Cites Hindu Scriptures While Sentencing Three to Life in Cow Slaughter Case
Gujarat Court Cites Hindu Scriptures While Sentencing Three to Life in Cow Slaughter CaseAi Genearated
1 min read

2024-ல் நடந்த சம்பவம்: 277 கிலோ இறைச்சி பறிமுதல் :

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் கலோல் தாலுகாவில் உள்ள ஜம்லா கிராமத்தில், கடந்த 2024 ஆகஸ்ட் 22-ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு வீட்டில் இருந்து சுமார் 277 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.55,400 எனக் கணக்கிடப்பட்டது.

மேலும், விலங்குகளை வெட்டப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயுதங்கள் மற்றும் இறைச்சியைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

6 பேரில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை :

இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையின் முடிவில், வசிம் குரேஷி, முகமது ரஃபிக் குரேஷி, அஷ்பாக் பெஹ்லிம் ஆகிய 3 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு ஆயுள் கடுங்காவல் தண்டனை விதித்து கலோல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், ஒவ்வொருவருக்கும் மொத்தம் ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் ரூ.2 லட்சம் ஒரு குற்றப்பிரிவின் கீழும், ரூ.1 லட்சம் மற்றொரு குற்றப்பிரிவின் கீழும் விதிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தாலும், அது ஆயுள் தண்டனையுடன் ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வரும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பசுக்கள் அழிந்துவிடும் – நீதிபதி கருத்து :

இந்த வழக்கில் 76 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கிய கூடுதல் அமர்வு நீதிபதி பி.ஆர். ராஜ்புத், பசுக்களின் முக்கியத்துவம் குறித்து மனுஸ்மிருதி, வேதங்கள் உள்ளிட்ட இந்து மத நூல்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

மேலும், பசுக்களை கொடூரமாக கொன்று அவற்றின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்றவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படாவிட்டால், காலப்போக்கில் பூமியில் பசுக்களே அழிந்துவிடும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்ப்புக்கு குஜராத் துணை முதல்வர் வரவேற்பு :

இந்தத் தீர்ப்புக்கு குஜராத் மாநில துணை முதல்வர் ஹர்ஷ் சங்கவி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பசுவதை செய்பவர்களைச் சட்டம் ஒருபோதும் தப்பிக்க விடாது என்பதற்கு இந்தத் தீர்ப்பு தெளிவான செய்தி என்றும், பசுக்களை பாதுகாப்பது குஜராத் அரசின் உறுதியான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.