

ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி, பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக வியாழக்கிழமை தீனதயாள் லாடோ லக்ஷ்மி யோஜனாவை Deendayal Lado Laxmi Yojana அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டம், பண்டிட் தீண்டயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான செப்டம்பர் 25, 2025 அன்று தொடங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 2,100 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.
செப்டம்பர் 25, 2025 முதல், 13 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து சகோதரிகளும் இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெறுவார்கள். திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள் இருவரும் இதன் பயனைப் பெறுவர். முதல் கட்டமாக, குடும்ப வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பங்கள் இதில் சேர்க்கப்படும். வரும் காலங்களில், மற்ற வருமானக் குழுக்களும் இந்தத் திட்டத்தில் படிப்படியாக சேர்க்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் சைனி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் பயன்களைப் பெற, திருமணமாகாத விண்ணப்பதாரர் அல்லது திருமணமான விண்ணப்பதாரரின் கணவர் கடந்த 15 ஆண்டுகளாக ஹரியானாவில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் கூறினார்.
இந்தத் திட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களின் எண்ணிக்கைக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஒரு குடும்பத்தில் மூன்று தகுதியுள்ள பெண்கள் இருந்தால், அவர்கள் மூவரும் இத்திட்டத்தின் பயனைப் பெறுவார்கள் என்று முதலமைச்சர் மேலும் கூறினார்.
இதனிடையே நேற்று ( புதன்கிழமை ) முதலமைச்சர் சைனி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY), முக்யமந்திரி ஷாஹரி ஆவாஸ் யோஜனா, முக்யமந்திரி கிராமின் ஆவாஸ் யோஜனா மற்றும் 100 சதுர அடி வரையிலான குடியிருப்பு நிலங்களுக்கு முத்திரைக் கட்டணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.
சட்டமன்றத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட சைனி, இந்த வீட்டு வசதித் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் சிறிய குடியிருப்பு நிலங்களின் உரிமையாளர்கள் இனி முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்று கூறினார்.
சட்டமன்ற அமர்வில் பேசிய முதலமைச்சர் தனது அரசின் சட்டம் மற்றும் ஒழுங்கு பதிவை பாதுகாத்து, மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி உறுதியாக நிலவுவதாகவும், எவ்வளவு செல்வாக்கு மிக்க குற்றவாளியாக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும் உறுதிப்படுத்தினார்.
எதிர்க்கட்சியினர் சபாநாயகரின் பொறுமையை வேண்டுமென்றே சோதிப்பதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகளால் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் சைனி குற்றம்சாட்டினார். தனது தலைமையிலான அரசின் ஆட்சியில் குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.
அரசு முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் (அக்டோபர் 18, 2024) குற்றத்திற்கு "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" கொள்கையை அறிவித்ததாகவும், குற்றவாளிகள் திருந்த வேண்டும் அல்லது மாநிலத்தால் திருத்தப்பட வேண்டும் என்று எச்சரித்ததாகவும் சைனி கூறினார்.
"ஹரியானாவில் சட்டமே உயர்ந்தது, கைதிகள் அல்ல," என்று முதலமைச்சர் அறிவித்தார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் தடைபட்டிருந்த FIR பதிவு இன்று வெளிப்படையான செயல்முறையாக மாறி, காவல்துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாகவும் கூறினார்.
புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டி, கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் பெரிய குற்றங்கள் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் (2004-2014) பாலியல் குற்றங்கள் மூன்று மடங்காக உயர்ந்ததாகவும் (2004-ல் 386-லிருந்து 2014-ல் 1,174 ஆக) சைனி கூறினார்.
2014-க்கு முன்பு ஹரியானாவில் பெண் கருக்கொலை களங்கம் இருந்ததை நினைவு கூர்ந்த அவர், பிரதமர் நரேந்திர மோடியால் பானிபட்டில் ஜனவரி 22, 2015 அன்று தொடங்கப்பட்ட "பேட்டி பச்சாவ், பேட்டி படாவ்" பிரச்சாரம், பாலின விகிதத்தை 871-லிருந்து 910 பெண்களாக உயர்த்த உதவியதாகவும், இந்த பெண் கருக்கொலை களங்கம் தங்கள் அரசால் அழிக்கப்பட்டது என்றும் சைனி கூறினார்.