

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த CRPF வீரர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 CRPF வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் மிர் பஜார் அருகே நோவ்போரா அக்ரான் (Nowpora Akhran) பகுதியில் நவம்பர் 11-ம் தேதி மதியம் சுமார் 2.15 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
CRPF-ன் 46-வது பட்டாலியனை சேர்ந்த வீரர்கள் அங்குள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது, இரண்டு மர்ம நபர்கள் பைக்கில் வந்து திடீரென துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் தொடர்பான CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அதில் முதல் 15 விநாடிகளிலேயே சுமார் 30 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சத்தம் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து அடுத்த ஒரு நிமிடத்திலும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
இந்த காட்சிகளில் துப்பாக்கிச் சூடு நடந்ததும் CRPF வீரர்கள் ஆயுதங்களுடன் பதிலடி கொடுக்கச் செல்லும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்தத் தாக்குதலில் தலைமை காவலர் சோம்வீர் சிங், காவலர்கள் ராகேஷ் தாஸ் மற்றும் சந்தோஷ் சந்த்ரு ஆகிய 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்கள் உடனடியாக அனந்த்நாக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் சந்தோஷ் சந்த்ருவுக்கு வயிறு மற்றும் முதுகுப் பகுதியில் குண்டு காயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள 92-வது ராணுவ மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலின்போது காயமடைந்த CRPF வீரர் ஒருவரும் உடனடியாகத் திருப்பிச் சுட்டுள்ளார்.
பாதுகாப்புப் படையினரின் இந்தப் பதிலடியால் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் போலீசார், ராணுவம் மற்றும் CRPF இணைந்து அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.
CCTV காட்சிகளையும் ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
====================